ஆவடி கமிஷனர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த போலீஸ் கட்டுப்பாட்டு அறை - டி.ஜி.பி. சைலேந்திரபாபு திறந்துவைத்தார்


ஆவடி கமிஷனர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த போலீஸ் கட்டுப்பாட்டு அறை - டி.ஜி.பி. சைலேந்திரபாபு திறந்துவைத்தார்
x

ஆவடி கமிஷனர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த போலீஸ் கட்டுப்பாட்டு அறையை டி.ஜி.பி. சைலேந்திரபாபு திறந்து வைத்தார்.

சென்னை

ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நவீன ஒருங்கிணைந்த போலீஸ் கட்டுப்பாட்டு அறை மற்றும் கட்டளை மையத்தை நேற்று காலை ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் முன்னிலையில் தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு திறந்துவைத்தார். இதில் கூடுதல் போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மாநிலத்தில் முதல் முறையாக 140 இன்ச் எல்.இ.டி. டி.வி. பொருத்தப்பட்டு அதில் ஆவடி போலீஸ் கமிஷனர் எல்லைக்கு உட்பட்ட 25 போலீஸ் நிலையங்களிலும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை நேரடியாக கண்காணிப்பது, தேர்ந்தெடுக்கப்பட்ட போக்குவரத்து சிக்னல்களை கண்காணிப்பது, அனைத்து ரோந்து வாகனங்களையும் கண்காணிப்பது, டிரோன் கேமரா மூலம் திருவிழாக்கள், பாதுகாப்பு அலுவல் ஏற்பாடுகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகள், மிகப்பெரிய பேரிடர்கள், திடீரென நிகழும் சம்பவங்கள் போன்றவற்றை கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி கண்காணிக்க முடியும்.

இந்த கண்காணிப்பு பணியில் போலீஸ் உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ் என 24 மணி நேரமும் 36 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். பாதுகாப்பு அலுவல்கள் போன்றவற்றின்போது போலீஸ் அதிகாரிகள் ஒருங்கிணைந்த நவீன கட்டுப்பாட்டு அறையை கட்டளை மையமாகவும் பயன்படுத்தலாம். மேற்கண்ட தகவல் ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Next Story