ஆவின் ஊழியர்கள் பணிநீக்கத்துக்கு இடைக்கால தடை - ஐகோர்ட்டு உத்தரவு


ஆவின் ஊழியர்கள் பணிநீக்கத்துக்கு இடைக்கால தடை - ஐகோர்ட்டு உத்தரவு
x

ஆவின் நிறுவன ஊழியர்களை பணிநீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஆவின் தலைமையகங்களில் பல்வேறு பணிகளுக்கு பெருந்தொகை லஞ்சம் பெற்றுக்கொண்டு தேர்வு நடத்தாமல் பணி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக திருப்பூர், காஞ்சீபுரம், திருவள்ளூர், மதுரை, தஞ்சாவூர், நாமக்கல், விருதுநகர், திருச்சி, தேனி மற்றும் சென்னை ஆகிய பால் உற்பத்தியாளர் சங்கங்களில் ஆவின் லஞ்ச ஒழிப்பு பிரிவின் பால்வள துணைப்பதிவாளர் மூலம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணையின் அடிப்படையில், ஆவினில் முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்ட 236 ஊழியர்களை பணிநீக்கம் செய்து ஆவின் நிர்வாகம் உத்தரவிட்டது. இந்த முறைகேடுகளுக்கு உடந்தையாக செயல்பட்டதாக 26 அதிகாரிகள் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தங்களை பணிநீக்கம் செய்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ராஜசேகர் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.

அதில், அனைத்து தேர்வு நடைமுறைகளும் பின்பற்றப்பட்டு, முறையான நியமனத்தின் அடிப்படையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ஆவினில் பணியாற்றிவரும் நிலையில், எங்களுக்கு எவ்வித நோட்டீசும் அளிக்காமல் திடீரென பணிநீக்கம் செய்தது சட்டவிரோதமானது என்று கூறியிருந்தனர். இந்த வழக்குகள் எல்லாம் நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தன.

மனுதாரர்கள் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, மனுதாரர்களான ஆவின் ஊழியர்களை பணிநீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்குகளுக்கு ஆவின் நிர்வாகம் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வருகிற மார்ச் 17-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.


Next Story