தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்கு படையெடுப்பு- தாம்பரம் ரெயில் நிலையம், பெருங்களத்தூரில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது


தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்கு படையெடுப்பு- தாம்பரம் ரெயில் நிலையம், பெருங்களத்தூரில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது
x

தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றதால் தாம்பரம் ரெயில் நிலையம் மற்றும் பெருங்களத்தூரில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

சென்னை

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வசிக்கும் தென்மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், தீபாவளி பண்டிகையை கொண்டாட நேற்று மாலை முதல் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

இதனால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரெயில்கள் அனைத்திலும் முன்பதிவு முடிந்துவிட்டதால் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் ஏறி செல்ல தாம்பரம் ரெயில் நிலையத்தில் கடுமையான கூட்டம் அலைமோதியது. இதனால் பயணிகள் போட்டி போட்டுக்கொண்டு ஒருவரை ஒருவர் முண்டியடித்தபடி முன்பதிவு இல்லாத ரெயில் பெட்டிகளில் ஏறி சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

பெருங்களத்தூர் பஸ் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தாம்பரம் சானடோரியம், தாம்பரம் ரெயில் நிலையம் பகுதியில் இருந்து ஏராளமான சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் அந்த பஸ்களில் ஏறி சொந்த ஊருக்கு சென்றனர். இதனால் தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதேபோல் பூந்தமல்லியில் இருந்து வேலூர், கிருஷ்ணகிரி, ஓசூர், திருப்பத்தூர், பெங்களூரு, ஆந்திரா, கர்நாடகா, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. வழக்கமாக பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். தற்போது மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருவதால் பூந்தமல்லி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் சிறப்பு பஸ் அணிவகுத்து நிற்பதால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சொந்த ஊர்களுக்கு செல்ல காத்திருக்கும் பயணிகளுக்கு போதிய கழிவறை வசதிகளும், நிழற்குடைகளும் இல்லாததால் முதியவர்கள், பெண்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.


Next Story