விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம்: 31 போலீசாரிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை

விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, கொடுங்கையூர் சட்டம்- ஒழுங்கு, குற்றப்பிரிவில் பணியாற்றும் 31 போலீசாரை சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு அழைத்து விசாரணை நடத்தப்பட்டது.
சென்னை செங்குன்றம் அலமாதி பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருந்தன. இந்த நிலையில் அவரை ஒரு திருட்டு வழக்கு தொடர்பாக கொடுங்கையூர் போலீசார் அழைத்துவந்து விசாரித்தனர். அப்போது அவர் உயிரிழந்தார். உடல்நலக்குறைவால் அவர் இறந்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது. அவரது குடும்பத்தினர் போலீசார் மீது குற்றம் சுமத்தினார்கள்.
இந்த நிலையில் கொடுங்கையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் உள்பட 5 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மாஜிஸ்திரேட்டு விசாரணை நடைபெற்றது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் போலீசார் தாக்கியதால் ராஜசேகர் உயிரிழக்கவில்லை என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. எனினும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதன்படி கொடுங்கையூர் சட்டம்- ஒழுங்கு, குற்றப்பிரிவில் பணியாற்றும் 30 போலீசாரை சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு அழைத்து நேற்று முன்தினம் விசாரணை நடத்தப்பட்டது.