சூளகிரி அருகே பிறந்து 10 நாளே ஆன பெண் குழந்தை கொன்று புதைப்பா? உடலை தோண்டி எடுத்து போலீசார் விசாரணை


சூளகிரி அருகே பிறந்து 10 நாளே ஆன  பெண் குழந்தை கொன்று புதைப்பா? உடலை தோண்டி எடுத்து போலீசார் விசாரணை
x
கிருஷ்ணகிரி

சூளகிரி

சூளகிரி அருகே பிறந்த 10 நாளில் பெண் குழந்தை கொன்று புதைக்கப்பட்டதா? என உடலை தோண்டி எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மீண்டும் பெண் குழந்தை

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சப்படி கிராமத்தை சேர்ந்தவர் எல்லப்பா (வயது 28). விவசாயி. இவரது மனைவி சத்யா. இந்த தம்பதிக்கு 4 வயதில் மகன் மற்றும் 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளனர். நிறைமாத கா்ப்பிணியாக இருந்த சத்யாவுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு 3-வதாக மீண்டும் பெண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில், அந்த பெண் குழந்தை திடீரென இறந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த குழந்தையை குடும்பத்தினர் புதைத்தனர். பெண் குழந்தையை கொன்று புதைத்ததாக சுகாதாரத்துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் சூளகிரி போலீசில் புகார் செய்தனர்.

உடல் தோண்டி எடுப்பு

இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் சூளகிரி தாசில்தார் சக்திவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அதிகாரிகள் முன்னிலையில் குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

3-வதாக பெண் குழந்தை பிறந்ததால், பெற்றோரே அதனை கொன்று புதைத்தார்களா? அல்லது வேறு காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வெளி வந்தபின்னரே, குழந்தை இறந்ததற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.


Next Story