'பற்களை பிடுங்கிய விவகாரத்தில் விசாரணை திருப்தி அளிக்கிறது' - பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் பேட்டி


பற்களை பிடுங்கிய விவகாரத்தில் விசாரணை திருப்தி அளிக்கிறது - பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் பேட்டி
x

தொடர்ந்து விசாரணை நியாயமாக நடைபெறும் என்று நம்புவதாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் மகாராஜன் தெரிவித்தார்.

சென்னை,

நெல்லை மாவட்டம் அம்பை காவல் உட்கோட்ட பகுதியில் உள்ள போலீஸ் நிலைய எல்லை பகுதிகளில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை, அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய பல்வீர்சிங் என்பவர், பற்களை கொடூரமாக பிடுங்கியதாக புகார் எழுந்தது.

இதையடுத்து அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே, இந்த புகார் தொடர்பான விசாரணை அதிகாரியாக சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் நியமிக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், பல்லை பிடுங்கியதாக ஏ.எஸ்.பி சித்ரவதை என்ற புகார் தொடர்பாக சென்னையில் உள்ள மனித உரிமை ஆணையத்தில் 5 பேர் இன்று ஆஜராகினர். பாதிக்கப்பட்ட 5 பேரிடம் மனித உரிமை ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

பாதிக்கப்பட்ட செல்லப்பா, இசக்கிமுத்து, சுபாஷ், வேதநாராயணன் உள்பட 5 பேரிடம் தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து மனித உரிமை ஆணையத்திடம் வாக்குமூலம் அளித்தனர். இதன் பிறகு பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் மகாராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"பல் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மனித உரிமை ஆணையம் அனுப்பிய சம்மன் அடிப்படையில், பாதிக்கப்பட்ட 5 பேர் இன்று நேரில் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர். மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி கண்ணதாசன், எஸ்.பி. மற்றும் டி.எஸ்.பி. ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.

இந்த விவகாரம் தொடர்பாக நடைபெறும் விசாரணை எங்களுக்கு முழு திருப்தி அளிக்கிறது. இதில் பாதிக்கப்பட்ட நபர்கள் மேலும் சிலர் உள்ளனர். அவர்களிடமும் விரைவில் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இந்த விசாரணை நியாயமாக நடைபெறும் என்று நம்புகிறோம்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.



1 More update

Next Story