சென்னையில் ஐ.பி.எல். போட்டியை காண ரசிகர்கள் பஸ்சில் இலவசமாக பயணிக்கலாம்


சென்னையில் ஐ.பி.எல். போட்டியை காண ரசிகர்கள் பஸ்சில் இலவசமாக பயணிக்கலாம்
x

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி நடைபெறும் நாட்களில் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

சென்னை ,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன் மார்ச் 22 முதல் வரும் ஏப்ரல் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்கும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டிக்கெட் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டது. டிக்கெட் இணையதளம் முடங்கும் அளவிற்கு சி.எஸ்.கே. ரசிகர்கள், போட்டியை பார்ப்பதற்கு ஆவலாக உள்ளனர்.

தற்போது ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி ஒன்றை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது. அதாவது, ஐ.பி.எல். போட்டியை காண சென்னை சேப்பாக்கம் மைதானம் வரும் ரசிகர்களுக்கு மாநகர பஸ்களில் கட்டணமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

ஐ.பி.எல். போட்டிகளை காண வருபவர்கள், தங்களது ஆன்லைன் டிக்கெட்டை காட்டி மாநகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம். போட்டி நடைபெறும் 3 மணிநேரத்திற்கு முன்பும், போட்டி முடிந்து 3 மணிநேரத்திற்கும் பின்பும் சேப்பாக்கத்தில் இருந்து பிற இடங்களுக்கு பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம். ஏ.சி பஸ்களில் இந்த சலுகை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். போட்டி டிக்கெட்டை, பயணி வைத்துள்ளாரா என்று நடத்துநர் உறுதி செய்த பிறகே அவர்களை பயணிக்க அனுமதிக்க வேண்டும். ஐ.பி.எல். டிக்கெட்டில் போட்டி நடக்கும் தேதி மற்றும் நேரம் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். போட்டி நடைபெறும் நாட்களில் மட்டுமே அனுமதிக்க வேண்டும். இதுகுறித்து பயண சீட்டு பரிசோதகர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும்' என்று போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.


Next Story