கரும்பு கொள்முதலில் முறைகேடு- சீமான் குற்றச்சாட்டு
கரும்பு ஒன்றிற்கு அரசு நிர்ணயித்த கொள்முதல் தொகை முழுமையாக விவசாயிகளுக்கு சென்று சேர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சீமான் கூறியுள்ளார்.
சென்னை,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசின் பொங்கல் தொகுப்பிற்காக கொள்முதல் செய்யப்படும் கரும்புக்கு அரசு நிர்ணயித்துள்ள விலையில், பாதியளவு மட்டுமே வழங்கப்படுவது வன்மையான கண்டனத்திற்குரியது.
கரும்பு ஒன்றுக்கு ரூ.33 என்று அறிவித்துவிட்டு, கொள்முதலின்போது 15 முதல் 20 ரூபாய் வரை மட்டுமே அரசு வழங்குவது விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் கொடுஞ்செயலாகும்.
மாவட்டத்திற்குள்ளேயே கரும்புகள் கொள்முதல் செய்யப்படும்போது வண்டி வாடகை என்ற பெயரில் ஒவ்வொரு கரும்பிற்கும் பாதி தொகையினை பறிப்பது எவ்வகையில் நியாயம்? ஆகவே, தமிழ்நாடு அரசு பொங்கல் தொகுப்பிற்கான கரும்பு கொள்முதலில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும்.
கரும்பு ஒன்றிற்கு அரசு நிர்ணயித்த கொள்முதல் தொகை முழுமையாக விவசாயிகளுக்கு சென்று சேர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.