கோவில்களில் வழங்கும் அன்னதானம் மனநிறைவாக இருக்கிறதா? பக்தர்கள் கருத்து


கோவில்களில் வழங்கும் அன்னதானம் மனநிறைவாக இருக்கிறதா? பக்தர்கள் கருத்து
x

தமிழக கோவில்களில் பக்தர்களுக்கு தினமும் வழங்கப்படும் அன்னதானம் மனநிறைவாக இருக்கிறதா? என்பது குறித்து பக்தர்களும், அதிகாரியும் கருத்து தெரிவித்து உள்ளனர்.

கோவில்களில் அன்னதானம்

'தானத்தில் சிறந்தது அன்னதானம்', 'போதும் என்ற மனப்பான்மையை அளிப்பது அன்னதானம் மட்டுமே', உண்மையில் இது வெறும் தத்துவமல்ல. இதனை நம் அனுபவப் பூர்வமாகவே பார்க்க முடியும். பசியோடு இருப்பவருக்கு உணவளிப்பது சிறந்த மனித பண்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

ஆன்மிகத்தில் ஈடுபடுபவர்களுக்கு உணவு அளிப்பது நம் கலாசாரத்தில் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. மேலைநாடுகளில் உணவு வங்கிகள் மூலமும் உறையுள்கள் மூலமும் உணவு இல்லாதவருக்கு உணவு வழங்கப்படுகிறது.

அந்தவகையில், தமிழகத்தில் கடந்த 2002-ம் ஆண்டு மார்ச் 23-ந்தேதி மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் அன்னதான திட்டத்தை அப்போதைய முதல்-அமைச்சர் மறைந்த ஜெயலலிதா தொடங்கி வைத்தார். ஆன்றோர்கள், சான்றோர்கள், பக்தர்கள் வரவேற்பை ெபற்று படிப்படியாக அதிகரிக்கப்பட்டு தற்போது 754 கோவில்களில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குறைந்தது 25 நபர்களுக்கும் அதிகபட்சம் 200 நபர்களுக்குமாக அன்னதானம் வழங்கப்படுகிறது. ஒரு இலைக்கு ரூ.35 செலவிடப்படுகிறது. தொடர்ந்து 2012-ம் ஆண்டு செப்டம்பர் 13-ந்தேதி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

நாள் முழுவதும் உணவு

தமிழக சட்டசபையில் 2021-2022-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கையின் போது, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகிய 3 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதனை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் 16-ந்தேதி தொடங்கி வைத்தார். அதன்படி காலை 8 மணியில் இருந்து இரவு 10 மணி வரை பக்தர்களுக்கு உணவு பரிமாறப்படுகிறது. தற்போது ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில், திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகரில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் அன்னதான திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது? சாப்பிடும் பக்தர்களுக்கு மனநிறைவு கிடைக்கிறதா? என்று அறிந்து கொள்வதற்காக கோவில்களில் சென்று பார்த்த போது சாப்பாடு நிறைவாக இருக்கிறது, இடநெருக்கடியை போக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

சரியான பதத்தில் சாதம்



மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் அன்னதானம் சாப்பிட்ட தமிழ் பொன்னி கூறும் போது, 'சமையலில் இன்னும் கூட கொஞ்சம் அதிக கவனம் செலுத்தியிருக்கலாம். இன்று (நேற்று) சாம்பாரில் கொஞ்சம் உப்பு குறைவாகவே இருந்தது. அதேபோல் சாம்பாரில் காய்கறிகளின் எண்ணிக்கையையும் அதிகரித்து இருக்கலாம். வயதானவர்கள் அதிகம் சாப்பிடுவதால் சாதம் சரியான பதத்தில் இருந்தது. இடப்பற்றாக்குறை இருந்ததால் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் அமர்ந்து மனநிறைவாக சாப்பிட முடியாத நிலை உள்ளது. அதனை மாற்றித்தர வேண்டும்' என்றார்.



புரசைவாக்கம் கங்காதீசுவரர் கோவிலில் அன்னதானம் சாப்பிட்ட மந்தைவெளியை சேர்ந்த சாரதா கூறும் போது, 'மாநகர கோவில்களில் குறைந்த எண்ணிக்கையில் அன்னதானம் வழங்குவதால் நோக்கம் நிறைவேறவில்லை. சற்று பக்தர்களின் எண்ணிக்கையும், அன்னதானம் வழங்கும் நேரத்தையும் அதிகரிக்க வேண்டும். அன்னதானத்தில் குறை ஒன்றும் இல்லை. நிறைவாகத்தான் இருக்கிறது' என்றார்.


ஒருமுறை மட்டுமே பொரியல்



திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் அன்னதானம் சாப்பிட்ட கோகிலா கூறும் போது, 'புறநகர் பகுதிகளில் இருந்து வரும் என்போன்ற பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் முடித்த பின்னர், மதிய உணவுக்காக ஓட்டல்களை தேடி செல்ல முடியவில்லை. கோவில்களில் வழங்கும் அன்னதானத்தை சாமி தந்த பிரசாதமாக கருதி சாப்பிடுகிறோம். மனம் நிறைவு ஏற்படுகிறது. ஆனால் பயனாளிகளின் எண்ணிக்கை என்பது சொற்பமாக இருக்கிறது. எனவே மாநகரில் உள்ள முக்கியமான கோவில்களில் அன்னதானம் வழங்கும் பக்தர்களின் எண்ணிக்கையை சற்று உயர்த்தினால் நன்றாக இருக்கும். சாதம் எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறார்கள். பொரியல் ஒரு முறை மட்டுமே தருகிறார்கள். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அன்னதான திட்டத்திற்கும் கொஞ்சம் நிதி அதிகரித்து வழங்கினால், அவர்களும் பொதுமக்களுக்கு தாரளமாகவும், மனநிறைவாகவும் உணவு வழங்குவார்கள். வாகன மண்டபத்தை உணவு கூடமாக மாற்றியிருப்பதால் இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது. சாப்பிட்ட திருப்தி இல்லை. எனவே அன்னதான கூடத்திற்கு தனி இடம் கட்ட வேண்டும்' என்றார்.

இட்லி-சாம்பார், ரவா, கிச்சடி



திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் அன்னதானம் பரிமாறுவதற்காக தினசரி வந்து செல்லும் பள்ளி ஆசிரியை மாலதி கூறும்போது, 'அன்னதானம் வழங்குவதில் என்னுடைய பங்காக, உணவு பரிமாறி கொடுக்கும் சேவையை தினசரி மதிய வேளையில் வந்து செய்து வருகிறேன். மனநிறைவு ஏற்படுகிறது. காலையிலும், மாலையிலும் வயதான மற்றும் சர்க்கரை நோய் உள்ள பக்தர்கள் அதிகம் பேர் வருகின்றனர். அவர்களுடைய நலன் கருதி காலை மற்றும் மாலையில் இட்லி- சாம்பார், ரவா, கிச்சடி, பொங்கல் போன்ற ஏதாவது ஒரு உணவு பொருளை தினசரி கொஞ்சம் கொடுக்க அரசு முயற்சிக்கலாம். அதற்கும் உபயதாரர்கள் உதவ முன்வருவார்கள்' என்றார்.



வடபழனியை சேர்ந்த கல்யாணி கூறும் போது, 'வீட்டில் நாங்கள் சமைப்பதை விட நன்றாக சமையல் செய்து அன்னதான கூடத்தில் பறிமாறுகிறார்கள். மனதிற்கும், வயிற்றுக்கும் நிறைவாக இருக்கிறது. சன்னதியில் டோக்கன் வழங்குவதால் பக்தர்கள் தான் வாங்கி பயனடைகிறார்கள். அன்னதானம் முடிந்தால் மடப்பள்ளியில் இருந்து காலதாமதமாக வரும் பக்தர்களுக்கு பகல் 1.30 மணி வரை தயிர் சாதம், வெண்பொங்கல், சர்க்கரை பொங்கலும் வழங்குகிறார்கள்.' என்றார்.

வார்த்தைகளால் விவரிக்க முடியாது



போரூரைச் சேர்ந்த துளசிதேவி கூறும் போது, 'அன்னதான திட்டத்தை நட்சத்திர ஓட்டல்களில் இருப்பது போன்று தேவைக்கு தாங்களே எடுத்து சாப்பிடுவது போன்று நவீனப்படுத்த வேண்டும். இதன் மூலம் அதிக எண்ணிக்கையில் பலர் பயன் அடைய வாய்ப்பு உள்ளது' என்றார்.

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் அன்னதானம் வழங்கிய உபயதாரான ஆஸ்திரேலியாவை சேர்ந்த உமாதேவி அருணாசலம் கூறியதாவது:-



உணவு என்பது மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்றாக உள்ளது. நாம் பிறருக்கு வழங்கும் உணவு, அவரின் வாழ்வை நீட்டித்துக்கொள்ளும் சக்தியை அவருக்கு வழங்குகிறது. அன்னதானம் நம் கலாசாரத்தில் தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு அற்புத தன்மையாகும். இது நம் கலாசாரத்தில் ஆன்மிக வளர்ச்சிக்கான பாதையாக பார்க்கப்படுகிறது. இன்று (நேற்று) என்னுடைய 47-வது ஆண்டு திருமண நாள் என்பதால் அன்னதானம் வழங்க பணம் செலுத்தியிருந்தேன். அதன்படி அன்னதானம் வழங்குவதை பார்வையிட்டேன்.

நாம் பிறருக்கு ஏதேனும் ஒன்றை வழங்கும்போது கிடைக்கக் கூடிய அற்புத உணர்வினை நம் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. தமிழகத்தை போன்று பிறமாநிலங்களில் உள்ள கோவில் நிர்வாகங்களும் இதனை கடைப்பிடிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மயிலாப்பூரில் நாள் முழுவதும் பிரசாதம்


மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் இணை கமிஷனர் தா.காவேரி கூறியதாவது:-

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், அரசு செயலாளர் மற்றும் கமிஷனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் அன்னதான திட்டத்தை மேலும் மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக திங்கள் முதல் வியாழன் வரை 150 பேருக்கும், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 200 பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தங்களையும் இணைத்து கொள்வதற்காக பக்தர்கள் தங்கள் திருமண நாள், பிறந்தநாள்களில் அன்னதானம் வழங்குவதற்காக ரூ.5 ஆயிரத்து 250 மற்றும் ரூ.7 ஆயிரம் வீதம் நிதி வழங்குகின்றனர். நானும் வாரம் இருமுறை அன்னதான கூடத்தில் வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்கிறேன். தனியாக ஒரு பதிவேடு போட்டு அன்னதானம் சாப்பிடுபவர்களின் கருத்தையும் கேட்டு வருகிறேன். சிறப்பான முறையில் இருப்பதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

நவராத்திரி மண்டபம் அருகில் உள்ள கட்டிடத்தில் அன்னதான கூடம் செயல்படுகிறது. அதில் இடப்பற்றாக்குறை இருப்பதால் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, 16 கால் மண்டபம் அருகில் கோவிலுக்கு சொந்தமான 2 ஆயிரம் சதுர அடி இடத்தில் ரூ.1.25 கோடி மதிப்பில் அன்னதான கூடம் கட்டப்பட உள்ளது. வருகிற 1-ந்தேதி முதல் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் வெண்பொங்கல், புளியோதரை, தயிர்சாதம், சர்க்கரை பொங்கல் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தானத்தில் சிறந்தது 'நிதானம்'

கோவில்களில் அன்னதானம் வழங்கும் பணிகளில் ஈடுபடுபவர்களும், சமையல் செய்பவர்களும் கூறும் போது, அன்னதானம் சாப்பிட வருபவர்களில் வெளியூர் பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. தரிசனம் முடித்துவிட்டு வரும் போது சாமி சன்னதிகளில் 'டோக்கன்' வழங்கப்படுகிறது. தானத்தில் சிறந்தது அன்னதானமாக இருந்தாலும், சிறந்த தானமாக உள்ள நிதானமும் ரொம்ப முக்கியமாக தேவைப்படுகிறது. எக்காரியத்தையும் நிதானமாக மனது அமைதி நிலையில் இருந்து, செய்யும்போது அது முழுமையான செயலாகவும், நன்மை பயக்கும் செயலாகவும் அமையும். ஆனால் டோக்கன் பெறுவதில் சில நேரங்களில் பக்தர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுவிடுகிறது. இதனை தவிர்க்க வேண்டும்.

அன்னதான கூடமும், சமையலறையும் அருகருகே இருப்பதால் கொஞ்சம் இட நெருக்கடி இருக்கத்தான் செய்கிறது. மாநகரில் உள்ள பெரும்பாலான கோவில்களில் இடபற்றாக்குறை இருக்கத்தான் செய்கிறது. அதனை நிவர்த்தி செய்து தருவதாக கோவில் நிர்வாக அதிகாரிகள் கூறி உள்ளனர்' என்றனர்.


Next Story