அரசு பள்ளி மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வா? - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்


அரசு பள்ளி மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வா? - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
x

கோப்புப்படம்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் விருப்பத்துக்கும், திறமைக்கும் ஏற்ப உயர்கல்வி படிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

அரசின் மாதிரி பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு ஏதுவாக ஒவ்வொரு மாவட்டத்திலும் அடிப்படை மதிப்பீடு தேர்வு நடத்தப்படும் என்று கல்வித் துறை தரப்பில் இருந்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

இது நுழைவுத்தேர்வு போன்ற திட்டமாக இருப்பதாக அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் இதுபற்றி பள்ளிக்கல்வித்துறை நேற்று ஒரு விளக்கம் அளித்திருக்கிறது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரசு பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களில் ஆர்வமும், திறமையும் உடைய மாணவர்களை தொடர்ச்சியாக பயிற்றுவிக்கவும், தேவையான அனைத்து உதவிகளை செய்யவும் அந்த மாணவர்கள் விருப்பப்படும் உயர்கல்வி நிறுவனங்களை சென்றடையும் வரை நீடித்த தொடர் கவனிப்பும், வழிகாட்டுதலும் வழங்கவும் மாணவர்களுக்கு அடிப்படை மதிப்பீடு நடத்த திட்டமிடப்பட்டது.

இந்த செய்தி மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்த இருப்பதாக தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு நுழைவுத்தேர்வு குறித்து தன்னுடைய நிலைப்பாட்டை தெள்ளத் தெளிவாக ஏற்கனவே தெளிவுப்படுத்தி உள்ளது. அந்த நிலைப்பாட்டில் தற்போதும் எவ்வித மாற்றமும் இல்லை.

தமிழ்நாட்டில் உள்ள செம்மை பள்ளிகள், மாதிரிப் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்களும் அவர்தம் விருப்பத்துக்கும், திறமைக்கும் ஏற்ப உயர்கல்வி படிப்பதற்கான வாய்ப்பினை பள்ளிக்கல்வித்துறை தொடர்ந்து வழங்கும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

1 More update

Next Story