பள்ளிக்கூடங்களில் சீருடை திட்டம் முறையாக செயல்படுகிறதா?


பள்ளிக்கூடங்களில் சீருடை திட்டம் முறையாக செயல்படுகிறதா?
x

கல்வித்துறையில் தமிழகம் பெற்றுவரும் வளர்ச்சிக்கு வித்திட்டவர் பெருந்தலைவர் காமராஜர். அவர் முதல்-அமைச்சராக இருந்த போதுதான் மதிய உணவு, இலவச சீருடை, பள்ளி சீரமைப்பு இயக்கம் உள்ளிட்ட முக்கியமான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

கரூர்

அனைவரும் சமம்

பள்ளிக்கூடம் என்று வந்துவிட்டால் ஏழை, பணக்காரர், உயர்ந்தவர், தாழ்ந்தவர், சாதி, மதம், இனம் வேறுபாடின்றி அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்பதற்காக பள்ளிகளில் சீருடை முறையை காமராஜர் கொண்டு வந்தார். குறிப்பாக தமிழக பள்ளிகளில் சீருடை 1964-1965-ம் கல்வியாண்டில் கொண்டுவரப்பட்டது. அது அரசு பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், நகராட்சி, மாநகராட்சி பள்ளிகள், உதவிபெறும் தனியார் பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டது. வாரம் ஒருநாள் (திங்கட்கிழமை) மாணவ, மாணவிகள் சீருடை அணிந்து வரவேண்டும். நீலநிற கால்சட்டை அல்லது பாவாடை, வெள்ளை நிற மேல்சட்டை அணிந்து வரவேண்டும்.

1964-1965-க்கு முன்பு சில தனியார் பள்ளிகளில் சீருடை அணியும் பழக்கம் இருந்தது. ஆனால் தற்போது அரசு பள்ளிகளை பொறுத்தவரையில் அனைத்து பள்ளிகளிலும் ஒரே நிறத்தில் சீருடைகள் உள்ளன. அதேபோல், அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒவ்வொரு பள்ளிக்கூடத்துக்கும், ஒவ்வொரு நிறத்தில் சீருடை முறை இருந்து வருகிறது. அதேபோல், தனியார் பள்ளி நிர்வாகங்கள் விரும்பும் நிறத்தில் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப சீருடை முறைகளை வைத்து உள்ளனர். இந்தநிலையில், பள்ளிகளில் சீருடை அணியும் திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்படுகிறதா? சமத்துவப்பார்வையில் சீருடை அணியப்படுகிறதா? அல்லது நாகரிக நோக்கில் அணியப்படுகிறதா? என்பவை குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

ஒரே சீருடை தேவையற்றது

கரூைர சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர் பிரகாசம்:- பள்ளிகளில் சீருடைகள் ஒரேமாதிரியாக கொண்டு வருவது முக்கியமல்ல. பள்ளிகளில் மாணவர்களுக்கு படிப்பு மற்றும் வசதிகள், கற்பிக்கும் முறை என அனைத்தையும் சரியான அளவில் ஏற்படுத்தி கொடுப்பதையும் பார்க்க வேண்டும். தனியார் பள்ளிகளின் படிப்பு மற்றும் மாணவர்களுக்கான வசதிகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டே மாணவர்களை பள்ளிகளில் சேர்க்கிறார்கள். அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு வசதிகள், கற்பிக்கும் முறை ஆகியவற்றை ஒரே மாதிரியாக கொண்டு வர வேண்டும். சீருடை மட்டும் ஒரே மாதிரியாக கொண்டு வந்தால் எந்த மாற்றமும் ஏற்படாது. பள்ளிகளில் கழிப்பறை வசதிகள், மேஜைகள், கட்டமைப்பு வசதிகள், உணவு பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் ஒரே மாதிரியாக கொண்டு வர வேண்டும். தனியார் பள்ளிகளில் மாணவர்களின் படிப்பு, கட்டமைப்பு வசதிகள், பாதுகாப்பு உள்ளிட்டவற்றை தொடர்ந்து கொடுத்து வருகிறோம். ஆசிரியர்களின் எண்ணிக்கை, அவர்களின் செயல்பாடுகள், மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்கும் முறை, மாணவர்களுக்கான வசதிகள், தேவைகள், பள்ளியின் தரம் என அனைத்தையும் ஒன்றாக கொண்டு வர வேண்டும். அதனை தவிர பள்ளி சீருடைகளை மட்டும் ஒரே மாதிரியாக கொண்டு வருவதால் பள்ளிகளின் தரம் உயராது. ஒரே சீருடை என்பது தேவையற்றது.

ஏற்றத்தாழ்வு உருவாகும்

நொய்யல் பகுதியை சேர்ந்த கண்ணன்:- தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு அந்த பள்ளிகள் தேர்ந்தெடுக்கும் நிறங்களில் மாணவ-மாணவிகளுக்கு சீருடை வழங்கப்படுகிறது. இதேபோல் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு வகுப்பு வாரியாக தனித்தனி சீருடைகளை வழங்கி வருகிறது. இருப்பினும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ- மாணவிகளின் சீருடைகளுக்கும், அரசு பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளின் சீருடைக்கும் வித்தியாசம் இருக்கிறது. அதேபோல் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் நாகரிகமாகவும் உடை அணிந்து செல்கின்றனர். இதனால் தனியார் பள்ளி மாணவ-மாணவிகளுக்கும், அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் ஏற்றத்தாழ்வு உருவாகும் சூழ்நிலை உள்ளது. எனவே அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் ஒரே சீருடையாக தமிழக அரசு மாற்ற வேண்டும்.

கல்வியில் கவனம் செலுத்த முடியும்

புகழூர் அரசு பள்ளி முதுகலை வேதியியல் துறை ஆசிரியை புவனேஸ்வரி:- மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைவரும் ஒரே சமம் என்பதை பறைசாற்றுவதற்காக சீருடை முறை கொண்டு வரப்பட்டது. அதன்படி கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்களுக்கு வெள்ளை சட்டையும், காக்கி டவுசரும், மாணவிகளுக்கு வெள்ளை சட்டையும், நீல நிற பாவாடையும் சீருடையாக இருந்து வந்தது. அதன் பிறகு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சீருடைகள் மாற்றி அமைக்கப்பட்டன. தனியார் பள்ளிகளில் பள்ளி நிர்வாகம் கூறும் நிறங்களில் மாணவர்கள் சீருடை அணிகிறார்கள். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஒரே நிறத்தில் சீருடையும், அதேபோல் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு வேறுபாடு இன்றி ஒரே நிறத்தில் சீருடையும் அறிவிக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்வதால் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற மனநிலை மாறி மாணவர்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்த முடியும்.

பள்ளிகளை சீரமைக்க வேண்டும்

புகழூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் கதிர்வேல்:- தனியார் பள்ளி மாணவ-மாணவிகளின் சீருடையை பார்த்தாலே அவர்கள் எந்த பள்ளியில் படிக்கிறார்கள் என்பதை எளிதில் அடையாளம் கண்டுவிடும் அளவிற்கு உள்ளது. இதேபோல் அரசு பள்ளிகளிலும் ஒவ்வொரு மாணவ-மாணவிகளும் எந்த வகுப்பை சேர்ந்தவர்கள் என்று கண்டுபிடிக்கும் அளவில் உடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் சீருடையை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு பதில் அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு சிதிலமடைந்த பள்ளி வகுப்பறைகள், மேற்கூரைகளை சீரமைத்து தர வேண்டும். மேலும், உடைந்த நாற்காலிகள், இருக்கைகளை மாற்றுவதுடன், கழிவறை, குடிநீர் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.

அடையாளம் காண எளிது

ஜெகதாபி அருகே உள்ள பாலப்பட்டியை சேர்ந்த ராஜமாணிக்கம்:- தனியார் பள்ளிகளில் டை, ஷூ, பெல்ட் என மேல்நாட்டு பாணியை பின்பற்றி மாணவர்கள் சீருடை அணிந்து வருகின்றனர். இந்த சீருடையும் ஒவ்வொரு பள்ளிக்கும் ஒவ்வொரு விதமாக இருப்பதால் பொதுவெளியில் பார்க்கும் போது எந்த பள்ளியை சேர்ந்த மாணவன் என எளிதாக அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது. பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் ஒரே மாதிரியான வண்ண சீருடையில் இருக்கும் மாணவர்களை பொது வெளியில் பார்க்கும்போது அரசு பள்ளி மாணவன் என தெரிந்தாலும் எந்த ஊர் பள்ளியை சேர்ந்த மாணவன் என கண்டுகொள்ள முடியாத சூழ்நிலை உள்ளது. அரசு தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை தனியார் பள்ளிக்கு இணையாக பெற்றோர்கள் கருதும் வகையில் தற்போது டை, ஷூ, பெல்ட் அணியும் பழக்கத்தை ஆசிரியர்கள் ஆங்காங்கே நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இப்படி பள்ளி செல்லும் மாணவர்களிடையே ஏழை, பணக்காரர் என்ற பாகுபாட்டை போக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள சீருடை திட்டம் சிறப்பாக நடைமுறையில் இருந்தாலும், தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவர்களிடையே வேறுபாட்டை ஏற்படுத்தி காட்டும் வகையில் நடைமுறையில் உள்ள சீருடை அணியும் பழக்கத்தை மாற்றி அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான சீருடை திட்டத்தை கொண்டு வந்தால் சிறப்பாக இருக்கும்.

விளையாட்டுகளுக்கு தனி சீருடை

குளத்துப்பாளையம் அரசு ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியை வளர்மதி:- தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வெவ்வேறு நிறத்தில் சீருடைகள் இருப்பதால் எந்த பள்ளியை சேர்ந்த மாணவர்கள் என எளிதில் அடையாளம் காணலாம். தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் டை, ஷூ, சாக்ஸ் போன்றவற்றை அணிந்து மிடுக்காக செல்கிறார்கள். இதேபோல் விளையாட்டுகளுக்கு தனி சீருடை அணிந்து செல்கிறார்கள். இதையெல்லாம் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் ஏக்கத்தோடு பார்க்கும் சூழல் உருவாகிவிட்டது. எந்த நோக்கத்திற்காக சீருடை கொண்டுவரப்பட்டதோ அந்த நோக்கம் கெட்டுப்போகாமல் இருக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரே மாதிரியான சீருடை

குளித்தலையை சேர்ந்த குமார்:- பள்ளி சீருடை என்றாலே அது ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதே அர்த்தம். எடுத்துக்காட்டாக போலீசாருக்கு எவ்வாறு காக்கி கலர் சீருடையாக வழங்கப்படுகிறதோ அதுபோல் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே வண்ணத்திலான சீருடை அணிவதை கொண்டு வரலாம். அப்படி கொண்டு வரும் பட்சத்தில் மாணவர்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வு இல்லாமல் இருக்கும். தனியார் பள்ளிகள் தங்களது பள்ளி சீருடை தனிப்பட்ட முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக பலதரப்பட்ட வண்ணங்களில் தங்கள் பள்ளி சீருடைகளை தேர்வு செய்கின்றனர். அனைத்து மாணவர்களுக்கும் ஒரே வண்ணத்திலான சீருடை கொண்டு வரும் பட்சத்தில் தங்களது பள்ளி மாணவர்களை தனித்துவப்படுத்தி காட்ட அந்த சீருடை மீது பள்ளியின் 'பேட்ச்' பொருத்துவது அல்லது அந்த சீருடைக்கு மேல் கோட்டு போன்றவற்றை அணியசெய்யலாம். தனியார் பள்ளிகளில் பல வண்ணங்களில் சீருடைகள் இருப்பதை பார்க்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இது ஏக்கத்தை ஏற்படுத்துகிறது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்களை பார்த்து தாங்கள் தரம் குறைந்து விடுகிறோம் என்ற எண்ண தோன்றுகிறது. அது போன்ற எண்ணத்தை மாற்ற வேண்டுமென்றால் அனைவருக்கும் ஒரே மாதிரியான சீருடை வழங்குவது நல்லது.

அரசு முடிவு

தமிழக கல்வித்துறை அதிகாரிகள்:- அரசு உத்தரவுப்படி அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சீருடை வழங்குவதற்காக ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தொகை ஒதுக்கப்பட்டு பள்ளி தொடங்குவதற்கு முன்பாக அந்தந்த பள்ளிகளுக்கு கொண்டு வழங்கப்படுகிறது. இதனை பெற்றுக்கொண்ட பள்ளி நிர்வாகங்கள் அவர்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சீருடையாக வழங்குகின்றனர். அனைத்து பள்ளிகளிலும் ஒரே மாதிரியான சீருடை அமல்படுத்துவது குறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டும். இதுதொடர்பாக துறையிலும் பெரிய அளவில் எந்த திட்டமும் தற்போது இல்லை.

தமிழக அரசின் 2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பள்ளி கல்வி துறைக்கு ரூ.40 ஆயிரத்து 290 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் பள்ளிக்கல்வி துறையில் 18 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் அமைப்பதற்கு ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நான் முதல்வன் திட்டம் மூலம் 12.7 லட்சம் மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். நவீன விடுதிகள் கட்டவும் ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று தான் சீருடை, கல்வி உபகரணங்களும் வாங்கி பள்ளிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. அரசு உதவிபெறும் பள்ளிகளில் சீருடை வேறு மாதிரி இருப்பதால் அரசு சார்பில் வழங்கப்படும் சீருடைக்கான துணி வேண்டாம் என்கின்றனர். ஆனால் அவர்களுக்கான ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில் சீருடை வழங்க முடியாத ஒரு சில மாணவர்களுக்கு அரசு வழங்கும் சீருடைகளும் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சீருடையை அறிமுகப்படுத்திய முதல் பள்ளி

1552-ம் ஆண்டில் இங்கிலாந்தில் உள்ள கிறைஸ்ட் ஹாஸ்பிடல் பள்ளி தான் பள்ளிச்சீருடையை பயன்படுத்திய முதல் பள்ளி என்று அறியப்படுகிறது. ஒரு நீண்ட நீல நிற மேல் அங்கி மற்றும் மஞ்சள் நிறத்தில், முழங்கால் வரையிலான காலுறை ஆகியன மாணவர்களுக்கு சீருடையாக வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட அதே மாதிரியான சீருடை இன்றும் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களால் அணியப்படுகிறது. சமூக ஆடைகளின் அடையாளங்கள் மாறியுள்ளதால் சமீபத்திய ஆண்டுகளில் சீருடைகளும் மாறிவருகின்றன என்று கல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.


Next Story