தாமரை சின்னத்தை பா.ஜ.க-வுக்கு ஒதுக்கியதில் விதிமீறல் உள்ளதா? சென்னை ஐகோர்ட்டு கேள்வி


தாமரை சின்னத்தை பா.ஜ.க-வுக்கு ஒதுக்கியதில் விதிமீறல் உள்ளதா? சென்னை ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 7 Nov 2023 7:22 AM GMT (Updated: 7 Nov 2023 7:33 AM GMT)

சின்னம் ஒதுக்கீட்டில் விதிமீறலை நிரூபிக்காவிட்டால் கடும் அபராதத்துடன் வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

சென்னை,

தேசிய மலரான தாமரையை ஒரு அரசியல் கட்சிக்கு ஒதுக்கியது அநீதி எனவும், பாஜக-வுக்கு ஒதுக்கப்பட்ட தாமரை சின்னத்தை ரத்துசெய்யக்கோரியும் அகிம்சை சோஷலிச கட்சியின் நிறுவன தலைவர் ரமேஷ், சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், தாமரை சின்னத்தை பாஜகவுக்கு ஒதுக்கியதை ரத்துசெய்யவேண்டும் என்ற கோரிக்கையுடன் கடந்த செப்டம்பர் மாதம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை மனு அளித்தும், அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது மனுவை பரிசீலித்து பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தாமரை சின்னத்தை ரத்துசெய்யவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, பாஜக-வுக்கு இந்த சின்னம் ஒதுக்கியதில் ஏதேனும் சட்டப்பிரிவு தடை விதிக்கிறதா என கேள்வியெழுப்பினர். அத்துடன், தாமரை சின்னத்தை பாஜகவுக்கு ஒதுக்கியதில் விதிமீறல் உள்ளதா என விளக்கமளிக்க மனுதாரருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து மனுதாரர் தரப்பில் கால அவகாசம் கேட்டதை அடுத்து, இந்த வழக்கை டிசம்பர் 8-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

அதேசமயம், விளம்பர நோக்கத்திற்காக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது என்றும், சின்னம் ஒதுக்கீட்டில் விதிமீறலை நிரூபிக்காவிட்டால் கடும் அபராதத்துடன் வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.


Next Story