சென்னையில் 15 போலீஸ் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ்


சென்னையில் 15 போலீஸ் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ்
x

சிறப்பான உள்கட்டமைப்பு வசதிக்காக சென்னையில் 15 போலீஸ் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் கிடைத்துள்ளது.

சென்னை

சென்னை,

சென்னை வடக்கு மண்டல போலீஸ்துறையில் உள்ள வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, புது வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், ராயபுரம், காசிமேடு, யானைக்கவுனி, ஏழுகிணறு, வடக்கு கடற்கரை, முத்தியால்பேட்டை, புளியந்தோப்பு, பேசின்பிரிட்ஜ், எம்.கே.பி.நகர், கொடுங்கையூர், செம்பியம் ஆகிய 15 போலீஸ் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிழ் கிடைத்துள்ளது.

கண்காணிப்பு கேமராக்கள், வரவேற்பு மற்றும் காத்திருப்பு அறைகள், சுற்றுச்சூழலை பேணிக்காத்தல், போலீஸ் நிலைய பதிவேடுகள் பராமரிப்பு உள்ளிட்ட அம்சங்கள் அடிப்படையில் இந்த 15 போலீஸ் நிலையங்களை இந்திய தர கவுன்சில் நிறுவனம் தேர்ந்தெடுத்து இந்த சான்றிதழை அளித்துள்ளது.

இந்த சான்றிதழ் வழங்கும் விழா வடக்கு கடற்கரை போலீஸ் நிலைய வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரிடம் 15 போலீஸ் நிலையங்களுக்கான ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழை அதன் தலைமை செயல் அதிகாரி கார்த்திகேயன் வழங்கினார். பின்னர் போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் அந்த சான்றிதழ்களை அந்தந்த போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களிடம் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

விழாவில் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பேசுகையில்,"நம்முடைய முதல்-அமைச்சர் உத்தரவுப்படி, போலீஸ் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 15 போலீஸ் நிலையங்களுக்கு தரச்சான்றிதழ் கிடைக்க முயற்சி எடுத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இன்னும் நிறைய போலீஸ் நிலையங்களுக்கு இந்த சான்றிதழ் கிடைக்க வேண்டும். சிறப்பான சேவையை மக்களுக்கு நாம் தொடர்ந்து வழங்குவோம்" என்றார்.

விழாவில் கூடுதல் கமிஷனர் லோகநாதன், வடக்கு மண்டல இணை கமிஷனர் ரம்யாபாரதி, துணை கமிஷனர்கள் பவன்குமார் ரெட்டி (வண்ணாரப்பேட்டை), ஸ்ரேயா குப்தா (பூக்கடை), ஈஸ்வரன் (புளியந்தோப்பு), உதவி கமிஷனர்கள் வீரக்குமார், பாலகிருஷ்ண பிரபு, செம்பேடு பாபு, அழகேசன், முகமது நாசர், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜா சிங், ராஜன், தவமணி, மனோன்மணி, புஷ்பராஜ், சந்திரசேகர், அய்யப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவில் போலீஸ் நிலைய புனரமைப்பு உள்ளிட்ட பணிகளுக்கு நன்கொடை வழங்கி வரும் வியாபாரிகள், சமூக ஆர்வலர்களை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் கவுரவித்தார்.


Next Story