ஐ.டி. ஊழியர் வீட்டில் 80 பவுன் நகை திருட்டு
வேலூர் தொரப்பாடியில் பட்டப்பகலில் ஐ.டி. ஊழியர் வீட்டில் 80 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். அவர்கள் திருடிய வீட்டில் மிளகாய் பொடியை தூவி சென்றுள்ளனர்.
ஐ.டி. ஊழியர்
வேலூர் தொரப்பாடி ராம்சேட்நகரை சேர்ந்தவர் பாலாஜி (வயது 42). இவர் சென்னையில் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி மோகனப்பிரியா (40), வேலூரை அடுத்த மூஞ்சூர்பட்டு அரசுப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுகிறார். இவர்களுக்கு மகதி (12) என்ற மகள் உள்ளார். பாலாஜி தனது தாயார் உஷாராணி மற்றும் மனைவி, மகளுடன் அடுக்குமாடி வீட்டில் வசித்து வருகிறார்.
பாலாஜி நேற்று அதிகாலை சாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதிக்கு சென்றார். தொடர்ந்து காலை 8 மணியளவில் உஷாராணி திருவண்ணாமலை மாவட்டம் கடலாடியில் உள்ள கோவிலுக்கும், மோகனப்பிரியா 9 மணியளவில் வீட்டின் கதவை பூட்டிவிட்டு மூஞ்சூர்பட்டில் நடந்த கோவில் திருவிழாவை காண மகள் மகதியுடன் சென்றதாக கூறப்படுகிறது.
80 பவுன் நகை திருட்டு
இந்த நிலையில் பிற்பகல் 3 மணியளவில் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு உஷாராணி வீடு திரும்பினார். அப்போது வீட்டின் ஹால் மற்றும் படுக்கையறை வாசலில் மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது. அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் படுக்கை அறைக்கு சென்று பார்த்தார். அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைப்பெட்டிகள் ஆங்காங்கே காலியாக சிதறி கிடந்தன.
பீரோவில் வைக்கப்பட்டிருந்த 80 பவுன் நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணத்தை மர்ம நபர்கள் திருடியது தெரிய வந்தது. இதுகுறித்து உஷாராணி உடனடியாக பாலாஜி, மோகனப்பிரியா மற்றும் போலீசாருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார்.
போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
அதன்பேரில் பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் டில்லிபாபு தலைமையிலான போலீசார் அங்கு சென்று பார்வையிட்டு உஷாராணி மற்றும் அக்கம், பக்கத்தில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினர். இதற்கிடையே மோகனப்பிரியா வீடு திரும்பினார். அவரிடமும் போலீசார் விசாரித்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பாலாஜியின் குடும்பத்தினர் வீட்டில் இல்லாததை நன்கு அறிந்த அந்த பகுதியில் வசிக்கும் மர்மநபர்கள் வீட்டின் பின்பக்க கதவு மற்றும் பீரோவை திறந்து நகையை திருடியது தெரிய வந்தது.
இதற்கிடையே திருப்பதிக்கு சென்ற பாலாஜி சாமி தரிசனம் செய்யாமல் மாலை 6.30 மணியளவில் வீடு திரும்பினார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) கிரண்ஸ்ருதி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் ஆகியோர் அங்கு சென்று பார்வையிட்டு விசாரித்தனர்.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகியிருந்த மர்மநபர்களின் கைரேகைகளை சேகரித்தனர். சிறிதுநேரத்தில் மோப்பநாய் சாரா வரவழைக்கப்பட்டது. மர்மநபர்களின் தடயங்களை மோப்பம் பிடித்த சாரா சுமார் ½ கிலோ மீட்டர் தூரம் ஓடிச்சென்று தொரப்பாடி சுடுகாட்டின் அருகே நின்றது. நகையை திருடி விட்டு மர்மநபர்கள் சுடுகாட்டின் அருகே இருந்து வாகனம் மூலம் தப்பி சென்றிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். வேலூரில் பட்டப்பகலில் ஐ.டி. ஊழியர் வீட்டில் 70 பவுன் நகை திருட்டுப்போன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.