நெருக்கடிகளையும், அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளும் ஊடகவியலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பது அவசியம் - மநீம
ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் பணியில் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் ஊடகவியலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பது அவசியம் என்று மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது.
சென்னை,
ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் பணியில், பல்வேறு நெருக்கடிகளையும், அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளும் ஊடகவியலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான முன்னெடுப்புகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டுமென்று மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் தேசிய பத்திரிகையாளர்கள் தின நல் வாழ்த்துகள். மக்களின் குரலாய் ஒலிக்கும் பத்திரிகையாளர்களுக்கு நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் ஆதரவுக் குரல் கொடுப்பதில் மக்கள் நீதி மய்யம் என்றும் முன்னணியில் நிற்கும்.
ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் பணியில், பல்வேறு நெருக்கடிகளையும், அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளும் ஊடகவியலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பது அவசியம். இதற்கான முன்னெடுப்புகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டுமென மநீம வலியுறுத்துகிறது" என்று கூறியுள்ளது.