மாநில கல்விக் கொள்கை, இந்த கல்வியாண்டில் அமலுக்கு வர வாய்ப்பில்லை என தகவல்..!
மாநில கல்விக் கொள்கை, இந்த கல்வியாண்டில் அமலுக்கு வர வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை,
தமிழக அரசின் மாநில கல்வி கொள்கையை வடிவமைக்க, கல்வியாளர்கள், வல்லுனர்கள் அடங்கிய மாநில அளவிலான குழு அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, மாநில கல்வி கொள்கையை உருவாக்க ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு அமைத்தது.
அந்த குழுவில் பல்வேறு பேராசிரியர்களும், கல்வியாளர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு, ஒரு வருடத்தில் கல்வி கொள்கையை வடிவமைத்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டது. அனைவருக்கும் உயர் கல்வி, தேர்வு முறைகளில் சீர்திருத்தம் உள்ளிட்ட 10 வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு மாநிலக் கல்விக் கொள்கை தயார் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த நிலையில், மாநில கல்விக் கொள்கை, இந்த கல்வியாண்டில் அமலுக்கு வர வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. கல்விக் கொள்கை தயாரிக்கும் குழுவிற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் மே மாதத்துடன் நிறைவடைகிறது. பணிகள் நிறைவடையாததால் மேலும் 4 மாதங்கள் கால அவகாசம் கேட்க குழு திட்டமிட்டிருப்பதாகவும், இதன் காரணமாக 2023-24 கல்வியாண்டில் மாநில கல்விக் கொள்கை அமலுக்கு வராது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் மாநில கல்விக் கொள்கை அடுத்த கல்வியாண்டில் அமலுக்கு வரலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.