கட்சி பாகுபாடு இல்லாமல் நீதியின் பாதையில் வழக்குகள் நடத்தப்படுவதை மத்திய அரசு உறுதி செய்யவேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

எதிர்கட்சியினர், கூட்டணிக்கட்சியினர் என்ற பாகுபாடு இல்லாமல் நீதியின் பாதையில் வழக்குகள் நடத்தப்படுவதை மத்திய அரசு உறுதி செய்யவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
சென்னை,
மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
டெண்டர் ஊழல் குற்றச்சாட்டு வழக்கு விசாரணையில் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்காக மத்திய அரசின் வழக்கறிஞர் (Additional Solicitor General) வாதாடுவது தார்மீக அடிப்படையில் நியாயமில்லை. அமைச்சர் வீடுகளில் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனை குறித்தான வழக்குகளில் வருமான வரித்துறைக்காக வாதிடும் வழக்கறிஞர் ஒருவர் அமைச்சருக்கு ஆதரவாக வாதாடுவது முரண்பாடான நிலைப்பாடாகும்.
இதற்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பது, பாஜக அரசின் ஊழல் ஒழிப்பு நிலைப்பாட்டை தோலுரித்துக் காட்டுவதாக உள்ளது. இந்த அனுமதியை மத்திய அரசு திரும்பப்பெறவேண்டும். மேலும், அனைத்து வழக்குகளிலும் எதிர்கட்சியினர், கூட்டணிக்கட்சியினர் என்ற பாகுபாடு இல்லாமல் "நீதியின் பாதையில்" வழக்குகள் நடத்தப்படுவதை மத்திய அரசு உறுதி செய்யவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.