இளம்பெண்களை வலையில் வீழ்த்தி பணம் பறித்தது அம்பலம்


இளம்பெண்களை வலையில் வீழ்த்தி பணம் பறித்தது அம்பலம்
x
தினத்தந்தி 12 Oct 2022 12:15 AM IST (Updated: 12 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சூலூர் விமானப்படையில் வேலை செய்வதாக கூறி, இளம்பெண்கள் பலரை தனது வலையில் வீழ்த்தி பணம் பறித்து இருப்பதாக கைதான என்ஜினீயர் குறித்து பகீர் தகவல் வெளியாகி உள்ளது.

கோயம்புத்தூர்


சூலூர் விமானப்படையில் வேலை செய்வதாக கூறி, இளம்பெண்கள் பலரை தனது வலையில் வீழ்த்தி பணம் பறித்து இருப்பதாக கைதான என்ஜினீயர் குறித்து பகீர் தகவல் வெளியாகி உள்ளது.

என்ஜினீயர் கைது

யோயோ என்ற செயலியில் அழகான ஆண்கள் புகைப்படத்தை வைத்து, இளம்பெண்களை ஏமாற்றி அவர்களின் புகைப்படத்தை ஆபாசமாக மாற்றி சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து விடுவதாக மிரட்டிய வழக்கில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் கூமாப்பட்டியை சேர்ந்த என்ஜினீயரான பரமசிவம் (வயது 33) என்பவரை கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், பரமசிவத்திற்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 வயதில் ஒரு குழந்தை இருப்பதும், சூலூர் விமானப்படையில் வேலை செய்வதாக கூறி அவர் பல இளம்பெண்களை ஏமாற்றி பணம் பறித்த பகீர் தகவலும் வெளியானது. அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பரமசிவம் செய்த மோசடி குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

அழகான ஆண்களின் புகைப்படம்

பி.இ.எலெக்ட்ரிக்கல் அண்டு எலெக்ட்ரானிக்கல்ஸ் படித்த பரமசிவத்துக்கு படிப்புக்கு தகுந்த வேலை கிடைக்கவில்லை. இதனால் கோவையில் தங்கி இருந்து பல இடங்களில் வேலை செய்து உள்ளார். அதில் போதிய வருமானம் கிடைக்கவில்லை. எனவே அவர் யோயோ செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் தனது புகைப்படத்துக்கு பதிலாக வேறு அழகான ஆண்களின் புகைப்படத்தை வைத்து அதன் மூலம் பல இளம்பெண்களை ஏமாற்றி உள்ளார்.

குறிப்பாக கோவையை சேர்ந்த 24 வயது இளம்பெண்ணிடம் தான் சூலூர் விமானப்படையில் என்ஜினீயராக வேலை செய்து வருவதாக கூறி அவரை தனது வலையில் விழ வைத்தார். அந்த இளம்பெண், அவரை பார்க்க வேண்டும் என்று கூறியதற்கு 2 முறை தட்டிக்கழித்து உள்ளார். தொடர்ந்து அந்த இளம்பெண் கேட்டுக்கொண்டதன் பேரில் அவரை பார்க்க சென்றபோதுதான் பரமசிவத்தின் மோசடி தெரியவந்தது.

பலரிடம் பணம் பறிப்பு

இது குறித்து அந்த இளம்பெண் அவரிடம் கேட்டபோது, உனது புகைப்படம் என்னிடம் இருக்கிறது அதை ஆபாசமாக சித்தரித்து வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து விடுவேன் என்றுக்கூறி மிரட்டி ரூ.60 ஆயிரம் பறித்து உள்ளார். இதுபோன்று அவர் பல இளம்பெண்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பறித்தது தெரியவந்து உள்ளது. எனவே அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அவருடைய வங்கி கணக்கை வைத்து எத்தனை பேரிடம் பணம் பெற்று உள்ளார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்த செல்போன்களில் இளம்பெண்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் இருந்தன. அவை மார்பிங் செய்யப்பட்டவைகளா? அல்லது இளம்பெண்களை மிரட்டி வாங்கியதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். எனவே அவரால் ஏமாற்றப்பட்ட இளம்பெண்கள் தாராளமாக புகார் கொடுக்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story