ஜாபர் சாதிக் கைது; மு.க.ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் பதவி விலக வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
தி.மு.க. மற்றும் அதனைச் சார்ந்தோருக்கு ஜாபர் சாதிக் நிதியளித்தது தெரியவந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை,
போதைப்பொருள் கடத்தில் வழக்கில் தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் ஜாபர் சாதிக்குடன் நெருக்கம் காட்டியது தெரியவருவதாகவும், இதற்கு தார்மீக பொறுப்பேற்று இருவரும் பதவி விலக வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
"தி.மு.க. அயலக அணி மாவட்ட அமைப்பாளராக இருந்த ஜாபர்சாதிக் 3 ஆண்டுகளாக 3,500 கிலோ போதைப்பொருள் தயாரிப்புக்கான மூலப்பொருட்களை கடத்தியுள்ளதாகவும், தி.மு.க. மற்றும் அதனைச் சார்ந்தோருக்கு ஜாபர் சாதிக் நிதியளித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
அந்த போதைப்பணத்தில் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளித்துள்ளதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவின் துணை இயக்குனர் அதிகாரபூர்வமாக இன்று அறிவித்த நிலையில், தன்னுடைய ஆட்சியில் தன் கட்டுப்பாட்டில் காவல்துறை இருக்கும் போதே, 3 ஆண்டுகளாக போதைப்பொருள் மாபியா நடத்தி வந்த ஜாபர் சாதிக்கை பிடிக்காமல் விட்டதோடு மட்டுமல்லாமல், அவருக்கு தி.மு.க.வில் கட்சி அங்கீகாரமும் அளித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் ஜாபர் சாதிக்குடன் நெருக்கம் காட்டியது தெரியவருவதாலும், அதை சார்ந்த செய்திகள் தொடர்ந்து வெளிவருவதாலும், இதற்கு தார்மீக பொறுப்பேற்று இருவரும் உடனடியாக பதவி விலக வேண்டும்."
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.