மதுரையில் ஜல்லிக்கட்டு மாடுகள் கடத்தல் - தடுக்க சென்ற காவலருக்கு காயம்
மாடுகளை கடத்திச் சென்ற வாகனம் பேரிகேட் தடுப்புகளை இடித்து தள்ளிவிட்டு அதிவேகத்தில் நிற்காமல் சென்றுள்ளது.
மதுரை,
மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக தயார் செய்யப்பட்டு வரும் காளைகளை திருடிச் சென்று விற்கக்கூடிய சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஜல்லிக்கட்டு காளைகள் உள்பட பிற மாடுகளும் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று முன்தினம் கூடல்புதூர் சோதனைச் சாவடி அருகே ஒரு வாகனத்தில் மாடுகள் கடத்திச் செல்லப்படுவதாக அங்கு பணியில் இருந்த உதவி காவல் ஆய்வாளர் தவமணிக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சோதனைச் சாவடியில் பேரிகேட் தடுப்புகளை வைத்து சாலையை மறிக்கும் முயற்சியில் காவலர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாடுகளை கடத்திச் சென்ற வாகனம் பேரிகேட் தடுப்புகளை இடித்து தள்ளிவிட்டு அதிவேகத்தில் நிற்காமல் சென்றுள்ளது.
இந்த சம்பவத்தில் காவலர் ஒருவருக்கு காலில் காயம் ஏற்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. கடத்தலில் ஈடுபட்ட வாகனத்தின் எண்ணை வைத்து மாடுகளை திருடிய கும்பலை பிடிக்க போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.