ஜல்லிக்கட்டு தீர்ப்பு தமிழ் பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும் கிடைத்த வெற்றி - ஒ.பன்னீர் செல்வம்


ஜல்லிக்கட்டு தீர்ப்பு தமிழ் பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும் கிடைத்த வெற்றி - ஒ.பன்னீர் செல்வம்
x

கோப்புப்படம்

சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு தமிழ் பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும் கிடைத்த வெற்றி என ஒ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

ஜல்லிக்கட்டு விளையாட்டு தொடர்பாக அஇஅதிமுக ஆட்சியில் இயற்றப்பட்ட சட்டம் செல்லும் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பினை மகிழ்ச்சியோடு வரவேற்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜல்லிக்கட்டு விளையாட்டு தொடர்பாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட சட்டம் செல்லும் என்ற சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு தமிழ்ப் பண்பாட்டிற்கு, தமிழ் கலாச்சாரத்திற்கு கிடைத்த வெற்றி

பொங்கல் திருவிழாவினையொட்டி தமிழ்நாட்டின் பகுதிகளில் பல தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டி காலங்காலமாக நடத்தப்பட்டு வந்த நிலையில், தி.மு.க. அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் அரசு 2011 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு தடை விதித்து ஓர் அறிவிக்கையினை வெளியிட்டது. இருப்பினும், 2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஜல்லிக்கட்டு முறைப்படுத்துதல் சட்டத்தின் அடிப்படையில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்தப்பட்டு வந்த நிலையில், 2009 ஆம் ஆண்டு சட்டத்தையும் சுப்ரீம்கோர்ட்டு 2014 ஆம் ஆண்டு ரத்து செய்து தீர்ப்பளித்தது. இதன் விளைவாக ஜல்லிக்கட்டு விளையாட்டினை தமிழ்நாட்டில் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இருப்பினும், மாண்புமிகு அம்மா அவர்களின் தொடர் வற்புறுத்தல் காரணமாக, ஜல்லிக்கட்டு விளையாட்டினை நடத்த ஏதுவாக 07-01-2016 ஆம் ஆண்டு மத்திய அரசு ஓர் அறிவிக்கையினை வெளியிட்டது. இந்த அறிவிக்கையினையும் சுப்ரீம்கோர்ட்டு 12-01-2016 அன்று தடை செய்து தீர்ப்பளித்தது. தி.மு.க. அரசு அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் அரசின் ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு எதிரான நடவடிக்கை காரணமாக தமிழ்நாட்டில் இரண்டு ஆண்டுகள் ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து, 2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்தப்பட வேண்டும் என்பதற்கு ஆதரவாக மிகப் பெரிய அளவில் போராட்டம் தமிழ்நாட்டில் நடைபெற்றதையடுத்து, மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களின் முழு ஒத்துழைப்புடன், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிக் காலத்தில் துரிதமான, உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, 2017 ஆம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்பு (தமிழ்நாடு திருத்தம் அவசரச் சட்டம் இயற்றப்பட்டு, மேதகு இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று சட்டமாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இதற்கான சட்டமுன்வடிவு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டது.

இதன்மூலம் தமிழ்நாட்டின் கலாச்சார மரபுரிமையை நிலைநாட்டிய பெருமை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு. இதற்கான சட்டமுன்வடிவை, முதலமைச்சர் என்ற முறையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நான் முன்மொழிந்ததையும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சட்டம் நான் முதலமைச்சராக இருந்தபோது இயற்றப்பட்டதையும் எனது வாழ்நாளில் கிடைத்த பாக்கியமாக நான் கருதுகிறேன். இன்றளவிலும் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன என்றால், அதற்குக் காரணம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட இந்தச் சட்டம்தான்.

இந்தச் சட்டத்தையும் எதிர்த்து, பிராணிகள் நல வாரியம் உள்ளிட்ட சில அமைப்புகள் சுப்ரீம்கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தன. ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு ஆதரவாக இந்த வழக்கில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ப. ரவீந்திரநாத் அவர்கள் தன்னை இணைத்துக் கொண்டு, வழக்கறிஞர் மூலம் வலுவான வாதங்களை வைத்து வாதாடினார். இதனை விசாரித்த ஐந்து நீதிபதிகள் அடங்கிய சுப்ரீம்கோர்ட்டு அரசியல் சாசன அமர்வு, இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கியுள்ளது.

சுப்ரீம்கோர்ட்டு இன்று வழங்கியுள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பில், ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு என்பது தமிழ்நாட்டின் கலாச்சாரத்தோடு ஒருங்கிணைந்த பகுதி என்றும், தமிழ்நாடு அரசால் இயற்றப்பட்ட சட்டம் அடிப்படை உரிமைகளை மீறவில்லை என்றும் தெரிவித்து, என்னால் முன்மொழியப்பட்டு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2017 ஆம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) சட்டம் செல்லும் என்று கூறியுள்ளது. இதனை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரவேற்கிறேன்.

இந்தத் தருணத்தில், 2017 ஆம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) சட்டமுன்வடிவினை தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் முன்மொழியும் வாய்ப்பினை வழங்கிய மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கும், இந்தச் சட்டம் நிறைவேற முழு ஒத்துழைப்பு அளித்த மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் தீர்ப்பு தமிழ்நாட்டின் கலாச்சாரத்திற்கும், தமிழ்நாட்டின் பண்பாட்டிற்கும் கிடைத்த வெற்றி. இதனை நான் தமிழ்நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்" என்று அதில் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.



Next Story