ஜல்லிப்பட்டி அரசு பள்ளியில் ஒரே வகுப்பறையில் 3 வகுப்பு மாணவர்களும் படிக்கும் பரிதாப நிலை
ஜல்லிப்பட்டி அரசு பள்ளியில் ஒரே வகுப்பறையில் 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அமர்ந்து படிக்கும் பரிதாப நிலை உள்ளது. இதனால் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பொள்ளாச்சி: ஜல்லிப்பட்டி அரசு பள்ளியில் ஒரே வகுப்பறையில் 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அமர்ந்து படிக்கும் பரிதாப நிலை உள்ளது. இதனால் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
அரசு பள்ளி
பொள்ளாச்சி அருகே உள்ள ஜல்லிப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு மஞ்சநாயக்கனூர், ஜல்லிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். அதன்படி தற்போது பள்ளியில் 115 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியில் 2 வகுப்பறை கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்பட்டன. இதைத்தொடர்ந்து அந்த கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன. ஆனால் அதன்பிறகு கூடுதல் கட்டிடம் கட்டி கொடுக்கவில்லை. அதனால் வகுப்பறைகள் இன்றி ஒரே வகுப்பறையிலேயே 1 முதல் 3-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகள் பாடம் படித்து வருகின்றனர். இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஜல்லிப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். வகுப்பறை கட்டிடம் போதுமானதாக இல்லாததால் 1 முதல் 3-ம் வகுப்பு வரை ஒரு வகுப்பறையும், 4, 5 மற்றும் 6 முதல் 8-ம் வகுப்பு வரை தலா ஒரு வகுப்பறையும் என 3 வகுப்பறை கட்டிடங்களில் பள்ளி செயல்பட்டு வருகின்றன. ஒரே வகுப்பறையில் 3 வகுப்பு மாணவர்களுக்கும் பாடம் நடப்பதால் மாணவர்கள் பாடத்தை கவனிப்பதில் சிரமம் உள்ளது.
இதனால் மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்கும் அபாயம் உள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் அதிகாரிகள் இடிக்கப்பட்ட வகுப்பறைகளுக்கு பதிலாக கூடுதலாக வகுப்பறை கட்டி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதே நிலை நீடித்தால் அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கை குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஜல்லிப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு தேவையான வகுப்பறை கட்டிடங்களை கட்டி கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.