தாலுகா அலுவலகத்தில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி புகைப்படங்கள் அகற்றம்; அதிமுக-வினர் குவிந்ததால் பரபரப்பு
திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி புகைப்படங்கள் அகற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் அறையில் முன்னாள் முதல்-அமைச்சர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு இருந்தது. கடந்த 3-ந் தேதி முதல் இன்று வரை தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் முருகேஷ் தலைமையில் ஜமாபந்தி நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்த நிலையில் இன்று தாசில்தார் அறையில் வைக்கப்பட்டு இருந்த முதல்-அமைச்சர்களின் புகைப்படங்கள் வரிசையில் இருந்து ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரது புகைப்படங்கள் அகற்றப்பட்டு காணப்பட்டது. அந்த புகைப்படங்கள் தாலுகா அலுவலக வளாகத்தில் பின்புறத்தில் ஒரு ஓரத்தில் வைக்கப்பட்டு இருந்தது.
இது குறித்த தகவல் சமூக வலைதளத்தில் பரவியது. இந்த தகவலை அறிந்த திருவண்ணாமலை அ.தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி எஸ். எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. உத்தரவின் பேரில் அ.தி.மு.க. வினர் சுமார் 15-க்கும் மேற்பட்டவர்கள் தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர்.
அப்போது அங்கு ஜமாபந்தி நிறைவு விழா நடைபெற்று கொண்டிருந்தது. இதற்கிடையில் முன்னாள் முதல்-அமைச்சர்கள் புகைப்படங்கள் அகற்றப்பட்ட தகவல் வெளியே பரவியதை அறிந்த வருவாய் துறையினர் மீண்டும் தாசில்தார் அறையில் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி புகைப்படங்களை அங்கு வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். முதலில் ஜெயலலிதா புகைப்படத்தை வைத்தனர்.
அப்போது அங்கு வந்த அ.தி.மு.க.வினர் அகற்றப்பட்ட அ.தி.மு.க. முன்னாள் முதல்-அமைச்சர்களின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர். இதையடுத்து உடனடியாக வருவாய் துறையினர் அ.தி.மு.க. முன்னாள் முதல்-அமைச்சர் புகைப்படங்களை வாங்க சென்றனர்.
மேலும் ஜமாபந்தி விழா நிறைவடைந்த பின்னர் தாசில்தார் அறைக்கு வந்த கலெக்டரிடம் அ.தி.மு.க.வினர் அகற்றப்பட்ட முன்னாள் முதல்- அமைச்சர்களின் புகைப்படங்களை மாட்ட வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்று அவர் உடனடியாக புகைப்படங்களை மீண்டும் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
பின்னர் அவர்கள் எடப்பாடி பழனிசாமி புகைப்படம் வைக்கும் வரை அங்கு இருந்து விட்டு கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.