ஓ.பன்னீர்செல்வத்தை தான் நம்பிக்கைக்குரியவராக ஜெயலலிதா அடையாளம் காட்டினார் - பண்ருட்டி ராமச்சந்திரன் பேச்சு


ஓ.பன்னீர்செல்வத்தை தான் நம்பிக்கைக்குரியவராக ஜெயலலிதா அடையாளம் காட்டினார் - பண்ருட்டி ராமச்சந்திரன் பேச்சு
x

ஓ.பன்னீர்செல்வத்தை தான் நம்பிக்கைக்குரியவராக ஜெயலலிதா அடையாளம் காட்டினார் என்று திருச்சி மாநாட்டில் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசினார்.

திருச்சியில் நடந்த மாநாட்டில் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியதாவது:-

நம்பிக்கைக்குரியவர்

1956-ம் ஆண்டு அண்ணா திருச்சியில் வரலாற்று சிறப்புமிக்க மாநாட்டை நடத்தினார். 67 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திருச்சியில் வரலாற்று சிறப்புமிக்க மாநாடு நடக்கிறது. நாம் ஒரு சிறுவனிடம் 50 ரூபாய் கொடுத்து கடையில் ஒரு பொருளை வாங்கி வர கூறினால் முதலில் என்ன பார்ப்போம். அந்த சிறுவன் நம்பிக்கைக்குரியவரா? என்று பார்ப்போம். 50 ரூபாய் பொருளுக்கே அப்படி பார்க்கும்போது, ஒரு நாட்டை 5 ஆண்டு காலம் ஆட்சி செய்பவர் நம்பிக்கைக்குரியவரா? என்று பார்க்க வேண்டாமா?. ஜெயலலிதா நம்பிக்கைக்குரியவராக ஓ.பன்னீர்செல்வத்தை தான் நமக்கு அடையாளம் காட்டினார்.

மண்டியிட்டு பதவியை வாங்கி கொண்டு, பிறகு காலை வாரியவர் நம்பிக்கைக்குரியவரா?. 3 முறை கொடுத்த பதவியை ஓ.பன்னீர்செல்வம் திரும்ப கொடுத்தார். நம்பிக்கை துரோகம் செய்த கூட்டத்தை தூக்கி எறிந்து ஈரோடு இடைத்தேர்தலில் நாட்டு மக்கள் தீர்ப்பு அளித்து இருக்கிறார்கள். பொதுக்குழுவையும், தலைமை நிர்வாகிகளையும் இவர்களே நியமித்து கொண்டால் அதை இந்த நாடு ஏற்குமா?. கழகம் ஏற்குமா?. ஆகவே எதிர்காலம் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கையில் தான் இருக்கிறது. எம்.ஜி.ஆரோடு கடைசி வரை இருந்தேன். இன்றைக்கு ஓ.பன்னீர்செல்வத்தோடு இருக்கிறேன். எம்.ஜி.ஆருக்கு எவ்வாறு உறுதுணையாக இருந்தேனோ?. அதேபோல உங்களுக்கும் நான் உறுதுணையாக இருப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

வைத்திலிங்கம்

மாநாட்டில் இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பேசுகையில், இந்த இயக்கம் தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். தொண்டர்களை மதிக்காதவர்கள் அழிந்து போவார்கள். ஜெயலலிதா 3 முறை கொடுத்த முதல்-அமைச்சர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் திரும்ப கொடுத்தார். எடப்பாடி பழனிசாமியின் திமிரை தொண்டர்களாகிய நீங்கள் தான் அடக்க வேண்டும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கட்டிக்காத்த விதியை காலில் போட்டு மிதித்த எடப்பாடி பழனிசாமிக்கு தண்டனை கொடுத்தாக வேண்டும். ஏப்ரல் 24-ந் தேதி தான் கோடநாடு கொள்ளை சம்பவம் நடந்தது. அதேநாளில் தான் இந்த மாநாடு நடக்கிறது. ஆகவே கோடநாடு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை இறைவன் தண்டிப்பான் என்று பேசினார்.


Next Story