ஜெயங்கொண்டம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் 4-வது நாளாக காத்திருப்பு போராட்டம்


பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் ஜெயங்கொண்டம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் 4-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர்

காத்திருப்பு போராட்டம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் தூய்மை பணிகளை மேற்கொள்ள தனியார் நிறுவனத்தின் மூலமாக தேர்வு செய்யப்பட்ட தூய்மை பணியாளர்கள் ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதிகளில் தூய்மை பணிகளை மேற்கொண்டு வந்தனர். இந்தநிலையில் 25 பெண்கள், 5 ஆண்கள் என 30 தூய்மை பணியாளர்கள் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் ஜெயங்கொண்டம் நகராட்சி நுழைவுவாயில் முன்பு கடந்த 1-ந் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பேச்சுவார்த்தை

நேற்று 4-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. இதையடுத்து, ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது தூய்மை பணியாளர்கள் நாங்கள் அறவழியில் போராடி வருகிறோம். பணி நீக்கம் செய்யப்பட்ட 30 தொழிலாளர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடமும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடமும் மனு அளித்துள்ளோம்.

தமிழக அரசு இந்த பிரச்சினையில் தலையிட்டு 30 தொழிலாளர்களையும் மீண்டும் பணியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

தர்ணா

இதற்கிடையே நகராட்சி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், நகராட்சி ஆணையர், நகரமன்ற தலைவர், ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க தலைவர் மற்றும் உள்ளாட்சித்துறை பணியாளர் சம்மேளன மாநில செயலாளர் தண்டபாணி, மாநில பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் தூய்மை பணியாளர்கள் மீண்டும் தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதியில் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.


Next Story