மூதாட்டியிடம் நகை பறிப்பு
வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம் அருகே வளவனூர் திரவுபதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குமாரசாமி மனைவி சரஸ்வதி (வயது 75). இவருக்கு சரிவர காது கேட்காது. நேற்று மாலை குமாரசாமி, வீட்டின் ஒரு அறையிலும், சரஸ்வதி வாசல்படி அருகிலும் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு முகத்தில் கர்ச்சிப் கட்டிக்கொண்டு வந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், தூங்கிக்கொண்டிருந்த சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறித்தார். உடனே தூக்கத்திலிருந்து எழுந்த சரஸ்வதி, திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். இந்த சத்தத்தை கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்த பொதுமக்கள் அங்கு விரைந்து ஓடி வந்தனர். அதற்குள் அந்த வாலிபர், தங்கச்சங்கிலியுடன் தப்பி ஓடிவிட்டார். பறிபோன நகையின் மதிப்பு ரூ.1 லட்சமாகும்.
இதுகுறித்த புகாரின்பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.