சிங்கப்பெருமாள் கோவில் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு - வாலிபர் கைது
சிங்கப்பெருமாள் கோவில் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடப்பட்டது. இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள திருத்தேரி பகத்சிங் நகர் இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 46). தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டனர்.
பின்னர் மாலை வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 9 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது.
இதுகுறித்து வெங்கடேசன் மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் வெங்கடேசன் வீட்டில் திருடியது ஆப்பூர் கிராமத்தை சேர்ந்த மூர்த்தி (வயது 27) என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் மூர்த்தியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.