சேலத்தில் அரசு ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு


சேலத்தில் அரசு ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
x

சேலத்தில் அரசு பெண் ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு போனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்

அரசு ஊழியர்

சேலம் அய்யந்திருமாளிகை பகுதியை சேர்ந்தவர் இலக்கியா (வயது 37). இவர் 5 ரோட்டில் உள்ள தொழிற்பேட்டை அரசு அச்சகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் இலக்கியா வேலைக்கு சென்று விட்டார்.

இதேபோல் மகன் வேலைக்கும், மகள் கல்லூரிக்கும் சென்றனர். மகள் கல்லூரி முடிந்து மாலையில் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. அதில் இருந்த 4 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், தனது தாயாருக்கு தகவல் கொடுத்தார். தொடர்ந்து தனது வீட்டில் நகை திருட்டு போனது குறித்து அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் இலக்கியா புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இதில் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு இந்த திருட்டில் மர்ம நபர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story