கத்திமுனையில் தம்பதி உள்பட 3 பேரிடம் நகை, பணம் பறிப்பு;வீடு புகுந்து முகமூடி அணிந்த கும்பல் அட்டூழியம்


கத்திமுனையில் தம்பதி உள்பட 3 பேரிடம் நகை, பணம் பறிப்பு;வீடு புகுந்து முகமூடி அணிந்த கும்பல் அட்டூழியம்
x

ராஜாக்கமங்கலம் அருகே வீடு புகுந்து கத்திமுனையில் தம்பதி உள்பட 3 பேரிடம் நகை, பணத்தை பறித்து சென்ற கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.

கன்னியாகுமரி

ராஜாக்கமங்கலம்,

ராஜாக்கமங்கலம் அருகே வீடு புகுந்து கத்திமுனையில் தம்பதி உள்பட 3 பேரிடம் நகை, பணத்தை பறித்து சென்ற கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.

முகமூடி அணிந்த கும்பல்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவர் செபாஷ் பாண்டியன் (வயது 32). இவருடைய மனைவி சங்கீதா (30). திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது.

வேலை விஷயமாக இவர்கள் குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள எறும்புக்காடு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுடன் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த வளையாபதி மகன் கோபி (24) என்பவரும் தங்கியிருந்தார். மீன் ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வந்தனர்.

நேற்றுமுன்தினம் இரவு அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர். அப்போது புழுக்கமாக இருந்ததால் முன்பக்க கதவை திறந்து வைத்து விட்டு அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் திடீரென முகமூடி அணிந்தபடி 3 பேர் கொண்ட கும்பல் உள்ளே புகுந்தது.

கத்தி முனையில் நகை பறிப்பு

பின்னர் கத்தி முனையில் சங்கீதா அணிந்திருந்த 3 கிராம் கம்மல் மற்றும் பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரம், 4 கிராம் மோதிரம் மற்றும் 3 செல்போன்கள் ஆகியவற்றை பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி விட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ராஜாக்கமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொள்ளையர்களால் பீரோ உடைக்கப்பட்டிருந்ததால் அங்கு பொருட்கள் சிதறி கிடந்தன. இதனால் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.

மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகவில்லை. இதனால் உடனடியாக துப்பு துலக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த துணிகர கொள்ளையில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து முகமூடி அணிந்த கும்பலை வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story