திண்டுக்கல்லில் அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் 35 பவுன் நகை திருட்டு
திண்டுக்கல்லில் அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் 35 பவுன் நகை திருடுபோனது.
திண்டுக்கல் வெங்கடாசலம் நகர் விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்தவர் நந்தகோபால் (வயது 50). அவருடைய மனைவி பரிமளா (45). இவர், திண்டுக்கல்லில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் இன்று காலை வழக்கம்போல் பரிமளா பள்ளிக்கு சென்றார்.
நந்தகோபால் திண்டுக்கல் அருகே உள்ள கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுவிட்டார். இதனால் அவர்களது வீடு பூட்டிக்கிடந்தது. இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள், பரிமளா வீட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் வீட்டுக்குள் பீரோவில் வைத்திருந்த 35 பவுன் நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரத்தை திருடி சென்றனர். இதற்கிடையே கோவிலுக்கு சென்றிருந்த நந்தகோபால் வீட்டிற்கு திரும்பி வந்தார்.
அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் வைத்திருந்த நகைகள், பணம் திருட்டு போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர், தாடிக்கொம்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.