தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 13 பவுன் நகை திருட்டு
ஓசூரில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 13 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஓசூர்
ஓசூரில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 13 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தனியார் நிறுவன ஊழியர்
ஓசூர் சாந்தி நகர் 3-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் தெய்வம் (வயது38). இவர், கர்நாடக மாநிலம் பொம்மசந்திராவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 4-ந் தேதி தெய்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் காரிமங்கலத்தில் உள்ள உறவினர் இல்ல விழாவிற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றனர். மறுநாள் அவரது வீட்டு கதவு திறந்து இருந்தது.
இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் தெய்வத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் வீட்டுக்கு வந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்தும், அதில் இருந்த பொருட்கள் சிதறியும் கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 13 பவுன் நகைகள் திருட்டு போனது தெரியவந்தது.
விசாரணை
இது குறித்து தெய்வம் ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். வீடு பூட்டி இருந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பூட்டை உடைத்து நகைகளை திருடி சென்றது தெரிந்தது.
தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை ஆய்வு செய்தனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.