ஜே.என்.யு தேர்தல்: பாசிச சக்திகளின் வீழ்ச்சிக்குக் கட்டியம் கூறும் வெற்றி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து


ஜே.என்.யு தேர்தல்: பாசிச சக்திகளின் வீழ்ச்சிக்குக் கட்டியம் கூறும் வெற்றி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
x

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய மக்கள் ஒன்றுசேர்ந்து பா.ஜ.க.வை வீழ்த்துவார்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யு) மாணவர்கள் யூனியன் தேர்தல் கடந்த 22-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில், 4 இடங்களிலும் இடதுசாரி கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதில், தலைவர் தேர்தலில் இடதுசாரி கட்சியை சேர்ந்த தனஞ்செய் வெற்றி பெற்றார். இந்த நிலையில் ஜே.என்.யு தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ள இடது முன்னணியினருக்கு எனது வாழ்த்துகள்.

ஏ.பி.வி.பி அமைப்பினரின் வன்முறை வழிமுறைகளும், கடைசி நிமிடத்தில் இடதுசாரி வேட்பாளர் ஸ்வாதி சிங் அவர்களின் வேட்புமனுவை நிராகரித்ததும் அவர்களின் தோல்வி பயத்தை அம்பலப்படுத்திவிட்டது. இத்தனை வெட்கக்கேடான செயல்களில் அவர்கள் ஈடுபட்டாலும், ஜே.என்.யு மாணவர்கள் தங்களது முற்போக்கு செறிந்த மரபை எப்போதும் போல நிரூபித்துவிட்டனர்.

வலதுசாரி பாசிச சக்திகளின் வீழ்ச்சிக்குக் கட்டியம் கூறுவதாக இந்த வெற்றி அமைந்துள்ளது. வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய மக்கள் ஒன்றுசேர்ந்து பா.ஜ.க.வை வீழ்த்துவார்கள்!" என்று தெரிவித்து உள்ளார்.


Next Story