வேலை வாங்கி தருவதாக மோசடி: அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான மேல்முறையீடு மனுக்கள் மீதான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
புதுடெல்லி,
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அப்துல் நசீர் அமர்வு விசாரித்து வருகிறது.
மனுதாரர் தர்மராஜ் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சித்தார்த் பட்நாயக் ஆஜராகி, அமைச்சர் செந்தில்பாலாஜி அவரது உதவியாளர் சண்முகம் வாயிலாக போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக ரூ.40 லட்சம் வசூலித்தார். முந்தைய ஆட்சியிலும், தற்போதைய ஆட்சியிலும் அமைச்சராக உள்ளார் என வாதிட்டார்.
இடையீட்டு மனுதாரர் சார்பில் ஆஜராகி மூத்த வக்கீல் கோபால் சங்கரநாராயணன் வாதிடுகையில், இந்த விவகாரத்தில் ஊழல் தடுப்பு சட்டம் பொருந்தாது என எதிர்தரப்பினர் வாதிடுகின்றனர். ஆனால், பணத்தை வாங்கிய இடைத்தரகர் போக்குவரத்து கழகத்தில் பணிபுரிவதால் ஊழல் தடுப்புச்சட்டம் பொருந்தும் என வாதிட்டார்.
ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் சார்பில் மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண், இந்த விவகாரத்தை ஊழல் தடுப்புச் சட்டத்தை கொண்டு விசாரிக்க வேண்டும் என வாதிட்டார்.
எதிர்மனுதாரர் அருள்மணி சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி ஆஜராகி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக வசூலிக்கப்பட்ட பணம் அமைச்சரிடம் கொடுக்கப்படவில்லை. எனவே இந்த விவகாரத்தில் சமரசம் செய்யலாம். மனுதாரர்களுக்கு எவ்வித முகாந்திரமும் இல்லை என வாதிட்டார்.
செந்தில்பாலாஜி சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சி.ஏ.சுந்தரம், இந்த விவகாரம் ஊழல் தொடர்புடையது அல்ல. தனி நபரிடம் தான் பணம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீடு மனு விசாரணைக்கு ஏற்புடையதல்ல என வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு இந்த மேல்முறையீடு மனுக்கள் தொடர்பான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. முன்னதாக விசாரணையின் போது இந்த மோசடி ஒரு சமூக குற்றம் என்று சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.