நிலவொளி பள்ளியில் சேர்ந்து பயன் பெறலாம் - கலெக்டர் தகவல்


நிலவொளி பள்ளியில் சேர்ந்து பயன் பெறலாம் - கலெக்டர் தகவல்
x

நிலவொளி பள்ளியில் சேர்ந்து பயன்பெறலாம் என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மற்றும் அதன் சுற்றுப்புறபகுதிகளில் உள்ள உழைக்கும் தொழிலாளர்களுக்காக நிலவொளி பள்ளிகள் மாவட்ட நிர்வாகத்தால் 1998-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. நிலவொளி பள்ளிகள் 24 பள்ளிகளாக அதிகரித்தது. இதற்கு தேவையான நிதியை நன்கொடையாளர்களிடம் இருந்து வசூலித்து நடைபெற்றது.

அனைவருக்கும் ஆரம்ப கல்வி திட்டம் மாவட்டத்தில் நடைபெற்றதால் நிலவொளி பள்ளிகளின் தேவை குறைந்து 2 பள்ளிகள் மட்டுமே நடத்தப்பட்டது. பள்ளியில் இடைநின்ற மாணவர்கள், உழைக்கும் தொழிலாளர்கள் தொடர்ந்து கல்வி கற்பதற்கு நிலவொளி பள்ளிகள் நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு பின்னர் மீண்டும் நிலவொளி பள்ளிகளை திறக்க மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. முதல் கட்டமாக யாகசாலை மற்றும் சி.எஸ்.எம். நிலவொளிபள்ளிகள் தொடங்கப்படவுள்ளது.

அதனைதொடர்ந்து காஞ்சீபுரம் மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் நிலவொளி பள்ளிகள் தொடங்கப்பட உள்ளது.

நிலவொளிப்பள்ளிகளில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அவர்களுடைய கல்வி தகுதியை பொறுத்து நேரடியாக 8, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் சேர்த்து கொள்ளப்படுவார்கள். 10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தேர்வு எழுத தகுதியானவர்களும் சேர்ந்து நிலவொளி பள்ளிகளில் படிக்கலாம்.

நிலவொளி பள்ளிகள் இரவு 7 மணிக்கு ஆரம்பித்து 9 மணிவரை நடைபெறும். நிலவொளி பள்ளிகள் மூலம் நேரடியாக 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை தேர்வு எழுதும் கற்போர்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.

நிலவொளி பள்ளியில் படிக்கும் கற்போர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் விலையில்லா பாட புத்தகம், குறிப்பேடுகள் மற்றும் கற்பித்தல் பொருட்கள் வழங்கப்படும்.

நிலவொளிப் பள்ளியில் சேர விரும்புவர்கள் 74184 19495 என்ற வாட்சப் எண்ணில் வருகிற 20-ந்தேதிக்குள் தங்களுடைய விவரங்களை தெரிவித்து கொள்ளலாம். மேலும் 044-27237696-ல் மாவட்ட அறிவொளி இயக்க திட்ட அலுவலக எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.

எனவே உழைக்கும் தொழிலாளர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story