சுட்டெரிக்கும் சூரியனை நோக்கி பயணம்; 'ஆதித்யா எல்-1' நாளை விண்ணில் பாய்கிறது


சுட்டெரிக்கும் சூரியனை நோக்கி பயணம்; ஆதித்யா எல்-1 நாளை விண்ணில் பாய்கிறது
x
தினத்தந்தி 1 Sep 2023 12:29 AM GMT (Updated: 1 Sep 2023 6:15 AM GMT)

விட்டுக்கொடுத்து வாழும் உறுப்பினர்களை கொண்ட குடும்பத்தை 'சூப்பர் குடும்பம்' என்கிறோம். ஆனால், பல கோடி ஆண்டுகளாக விட்டுக்கொடுக்காமலேயே ஒரு குடும்பம் பயணித்து கொண்டிருக்கிறது, அதுதான் 'சூரிய குடும்பம்'.

இந்த வார்த்தையை கேட்ட உடன், பள்ளி காலத்தில், சமூக அறிவியல் பாடத்தில் விரிவாக படித்த ஞாபகம் நிறைய பேரின் நினைவுக்கு வரலாம்.

சூரிய குடும்பத்தின் தலைவரான சூரியன், மையமாக இருந்து கொண்டு, உறுப்பினர்களான புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய 8 பெரிய கோள்களையும், உருவத்தில் சிறிய உறுப்பினர்களான புளூட்டோ உள்ளிட்ட பல சிறிய கோள்களையும், குறிப்பிட்ட இடைவெளியில், வெவ்வேறு நீள்வட்டப் பாதையில் தன்னை சுற்றிவர செய்து கொண்டிருக்கிறது.

சுடச்சுட சூரியன் ஆய்வு

இப்போது, நிலவின் தென்துருவ ஆராய்ச்சிக்காக விக்ரம் லேண்டரை தரையிறக்கி, புதிய சாதனை படைத்த இந்தியாவின் 'இஸ்ரோ' நிறுவனம், சுடச்சுட சூரியன் பற்றிய ஆய்விலும் முதல் முறையாக களம் இறங்கி இருக்கிறது.

பொதுவாக, கோள்கள் பற்றிய ஆய்வு என்பது ஆதாயத்துக்காக நடத்தப்படுவது. அங்கு மனிதன் வாழ முடியுமா?, என்னென்ன கனிம வளங்கள் இருக்கின்றன? என்பதே அந்த ஆய்வின் நோக்கமாக இருக்கும். ஆனால், சூரியன் பற்றிய ஆய்வு என்பது அதற்கு நேர் எதிரானது. ஆதாயத்துக்காக இல்லாமல், ஆபத்து அபாயம் எதுவும் நமக்கு ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா? என்பதை முன்கூட்டியே கணிக்க நடத்தப்படுவது.


சூரியனுக்கு நெருக்கமாக பறந்தது

பூமியில் இருந்து 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சூரியனை பற்றிய ஆய்வை, இதுவரை அமெரிக்கா, ஐரோப்பா, ஜெர்மனி ஆகிய நாடுகளை சேர்ந்த விண்வெளி நிறுவனங்களே மேற்கொண்டிருக்கின்றன. 2018-ம் ஆண்டு அமெரிக்காவின் நாசா அனுப்பிய 'பார்க்கர் சோலார் ப்ரோப்' என்ற கருவி 3 ஆண்டுகள் கழித்து (2021-ம் ஆண்டு), சூரியனுக்கு மிக நெருக்கமாக பறந்து சென்று, சூரிய ஒளி அமைப்பான கொரோனாவுக்குள் புகுந்து, 'சூரிய சக்தி', 'சூரிய புயல்' பற்றிய ஆய்வை மேற்கொண்டது.

கடைசியாக, 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஐரோப்பா அனுப்பிய 'சோலார் ஆர்பிட்டர்' கருவி, பூமியில் இருந்து 5 கோடி கிலோ மீட்டர் தூரம் வரை சென்று, சூரியனின் தென்துருவத்தில் ஆய்வு மேற்கொண்டது. இதன் ஆயுள் காலம் 7 ஆண்டுகள் என்பதால், இன்னும் தனது பணியை அது இடைவிடாமல் செய்து கொண்டிருக்கிறது.

4-வது நாடு இந்தியா

சூரியன் பற்றிய ஆய்வில், தற்போது 4-வது நாடாக இந்தியாவும் இணையப் போகிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை (சனிக்கிழமை) பகல் 11.50 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் ரூ.423 கோடி செலவில் விண்ணில் ஏவப்படும் 'ஆதித்யா எல்-1' விண்கலம்தான் இந்த புதிய சாதனையை நிகழ்த்தப்போகிறது. சுமார் 400 கிலோ எடை கொண்ட இந்த விண்கலம், சூரியனின் வெளிப்புற வெப்பச் சூழல், கதிர் வீச்சு, காந்தப் புலம் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கிறது.

பூமியின் துணைக் கோளான நிலவு (சந்திரன்) 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இந்த தூரத்தை 40 நாட்களில் கடந்து சென்ற சந்திரயான்-3, நிலவின் தென் துருவத்தில் இறங்கி, வெற்றிகரமாக ஆய்வு பணியை மேற்கொண்டு வருகிறது.

சாதாரணமான காரியமா?

15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சூரியன், கொதிக்கும் நெருப்பு குழம்பு. அருகில் சென்றாலே பொசுக்கிவிடும். அப்படி இருக்கும்போது, பக்கத்தில் சென்று ஆய்வு மேற்கொள்வது என்பது, சாதாரணமான காரியம் கிடையாது.

முதன்முதலில் சூரியன் பற்றிய ஆய்வில் இறங்கியுள்ள இந்தியா, நிலவில் வெற்றிக் கொடியை நாட்டியதுபோல, சூரியனிலும் ஜோதி மயமாய் வெற்றி கோப்பையை ஏந்த நினைக்கிறது. அதற்காக பல்வேறு கட்ட திட்டங்களை அடுக்கடுக்காக செயல்படுத்த இருக்கிறது.

15 லட்சம் கி.மீ. தூர இலக்கு

விண்ணில் பாயும் ஆதித்யா எல்-1 விண்கலம் முதலில் பூமிக்கு வெளியே புவி வட்டப்பாதையில் கொண்டுபோய் நிலை நிறுத்தப்பட இருக்கிறது. அதன்பிறகு, நீள்வட்டப்பாதையில் பூமியை சுற்றிவரும் ஆதித்யா எல்-1 விண்கலம், அதன்பிறகு சூரியன் நோக்கி நகர்த்தி செல்லப்படும். பூமியில் இருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 'லெக்ரேஞ்சியன் புள்ளி 1' என்பது தான் அதன் இலக்கு.

அந்த இடத்தில்தான் சூரியனுக்கும், பூமிக்கும் இடையேயான ஈர்ப்பு விசை நிலையாக இருக்கும். பொதுவாக, எந்தவொரு கோளை சுற்றியும் 5 இடங்களில் நிலையான ஈர்ப்பு விசை புள்ளிகள் இருக்கும். அந்த இடங்கள் ஆய்வுப் பணிகளுக்கு சாதகமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஆதித்யா எல்-1 பெயர் வந்தது எப்படி?

சூரியனை சுற்றியும் அதுபோல் 5 இடங்கள் இருப்பதை 18-ம் நூற்றாண்டில் ஜோசப் லூயிஸ் லெக்ரேஞ் என்ற விஞ்ஞானி கண்டுபிடித்தார். எனவே, அந்த 5 இடங்களும் அவரது பெயரிலேயே லெக்ரேஞ்சியன் 1, 2, 3, 4, 5 என அழைக்கப்படுகிறது. தற்போது, நாம் அனுப்ப இருக்கும் ஆதித்யா எல்-1 விண்கலத்தின் பெயரில் 'ஆதித்யா', 'எல்-1' என்ற 2 வார்த்தைகள் இருக்கின்றன. அதில், 'ஆதித்யா' என்பது சூரியனை குறிக்கும். 'எல்-1' என்பது 'லெக்ரேஞ்சியன் 1' என்ற வார்த்தையின் சுருக்கம். 'எல்-1' புள்ளிக்கு சென்று ஆய்வு செய்ய இருப்பதால், இந்திய விண்கலத்துக்கு 'ஆதித்யா எல்-1' என்று பெயர் சூட்டப்பட்டது.

இந்த ஆதித்யா எல்-1 விண்கலம், 127 நாட்களில் 15 லட்சம் கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டு 'லெக்ரேஞ்சியன் 1' புள்ளியில் நிலை நிறுத்தப்பட இருக்கிறது. அங்கு இருந்தபடிதான், சூரியன் பற்றிய ஆய்வுப்பணியை ஆதித்யா எல்-1 தொடங்க இருக்கிறது.

சக்தி வாய்ந்த தொலைநோக்கிகள்

சூரியனில் இருந்து 14 கோடியே 85 லட்சம் கிலோ மீட்டர் தூரம் பின்தங்கி இருந்தாலும், ஆதித்யா எல்-1-ல் இருக்கும் சக்தி வாய்ந்த தொலைநோக்கி (டெலஸ்கோப்) கருவிகள், சூரியனை அருகில் இருந்து பார்ப்பதுபோன்ற பிரமாண்டத்தை காட்டும்.

விண்கலத்தில் உள்ள 7 அதிநவீன கருவிகள், சூரியனின் ஒளிக்கோளம், குரோமோஸ்பியர், வெளிப்புற அடுக்கு உள்ளிட்டவைகளை துல்லியமாக ஆய்வு செய்யும். ஆதித்யா எல்-1-ன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் என்பதால், அதுவரை இடைவிடாமல் ஆய்வு பணியை மேற்கொள்ளும். சூரியனை பற்றிய புதிய புதிய தகவல்கள் சுடச்சுட நமக்கு கிடைத்துக்கொண்டே இருக்கும்.


Next Story