அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று தீர்ப்பு; தலைமை அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு


அதிமுக பொதுக்குழு வழக்கில்  இன்று தீர்ப்பு;  தலைமை அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 2 Sept 2022 8:53 AM IST (Updated: 2 Sept 2022 8:59 AM IST)
t-max-icont-min-icon

அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் நிலையில் தலைமை அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை,

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11-ந் தேதி சென்னை வானகரத்தில் நடந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், பொதுக்குழு செல்லாது, ஜூன் 23-ந்தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடரவேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் டெல்லி மூத்த வக்கீல்கள் சி.எஸ்.வைத்தியநாதன், சி.ஆரியமா சுந்தரம், விஜய் நாராயண். ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல் குரு கிருஷ்ணகுமார், அரவிந்த் பாண்டியன், வைரமுத்து தரப்பில் வக்கீல் ஸ்ரீராம் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த மாதம் 25-ந்தேதி உத்தரவிட்டனர். இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதிகள் பிறப்பிக்கின்றனர். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள், அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உதவி ஆணையர் தலைமையில் சுமார் 80 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தீர்ப்பு வந்த பின் ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க இந்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Next Story