சிறார் குற்றங்கள்: போலீசார் வரைமுறையின்றி கைது நடவடிக்கை - ஐகோர்ட்டு அதிருப்தி


சிறார் குற்றங்கள்: போலீசார் வரைமுறையின்றி கைது நடவடிக்கை - ஐகோர்ட்டு அதிருப்தி
x

சிறார் குற்றங்கள் தொடர்பான விவகாரத்தில் காவல்துறையினர், வரைமுறையின்றி கைது நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என்று சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்திருக்கிறது.

சென்னை,

குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள் தெளிவாக இருந்தும் சிறார் குற்றங்கள் தொடர்பான விவகாரத்தில் காவல்துறையினர், வரைமுறையின்றி கைது நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என்று சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்திருக்கிறது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 16 வயது மாணவிக்கு, சக மாணவன் மஞ்சள் கயிறு கட்டிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. இது தொடர்பாக மாணவனுக்கு எதிராக சிதம்பரநகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மாவட்ட குழந்தைகள் நலக்குழு மாணவியை அரசு நல காப்பகத்தில் அனுமதித்தது. இதையடுத்து மாணவி மீட்க கேட்டு மாணவியின் தந்தை தாக்கல் செய்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு மாணவியை பெற்றோரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் பிரகாஷ் மற்றும் சந்திரசேகர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சமூக வலைதளங்கள் மூலம் உருவாகக்கூடிய அழுத்தம் காரணமாக என்ன செய்வது என்று தெரியாமல் ஆட்சியரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் இது போன்ற நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் இருவரையும் கைது செய்ததன் மூலமாக என்ன சாதித்து விட்டீர்கள் என்ற கேள்வியையும் நீதிபதிகள் எழுப்பினார்கள்.

சிறார் சம்பந்தமான வழக்குகளை கையாள்வது குறித்து காவல்துறை, மருத்துவத்துறை, குழந்தைகள் நல வாரியம் மற்றும் கோர்ட்டுக்கு உதவ நியமிக்கப்பட்ட வக்கீல்கள் ஆகியோர் இணைந்து ஆலோசித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.


Next Story