கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் - இந்தியர்கள் புறக்கணிப்பு


கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் - இந்தியர்கள் புறக்கணிப்பு
x

போராட்டத்தின் ஒரு பகுதியாக கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்பதாக மீனவர்கள் அறிவித்தனர்.

ராமநாதபுரம்,

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே நடுக்கடலில் அமைந்துள்ளது கச்சத்தீவு. இது ராமேசுவரத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும் இலங்கை நெடுந்தீவு பகுதியில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

இந்த தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் 2 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முதல் நாள் நிகழ்ச்சியாக இன்று மாலை 4 மணிக்கு கொடிமரத்தில் அந்தோணியாரின் உருவம் பதித்த கொடியை நெடுந்தீவு பங்குத்தந்தை ஏற்றி வைத்தார். இதையடுத்து சிலுவை பாதை, திருப்பலி மற்றும் தேர் பவனி நடைபெற்றது. தொடர்ந்து நாளை(சனிக்கிழமை) காலை 7 மணிக்கு யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் தலைமையில் திருவிழா திருப்பலி நடைபெறுகிறது.

இதனிடையே கச்சத்தீவு திருவிழாவில் கலந்து கொள்வதற்காக 75 விசைப்படகுகளிலும், 24 நாட்டுப்படகுகளிலும் செல்ல மொத்தம் 3 ஆயிரத்து 265 பேர் ராமேசுவரத்தில் பதிவு செய்திருந்தனர். ஆனால், இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தால், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமேசுவரத்தை சேர்ந்த 5 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ராமேசுவரத்தில் மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக இந்த ஆண்டு கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்பதாகவும் அறிவித்துள்ளனர். இதன் காரணமாக இந்த ஆண்டு கச்சத்தீவு திருவிழாவில் இந்தியர்கள் யாரும் பங்கேற்கவில்லை. இருநாட்டு உறவை மேம்படுத்தும் வகையில் நடைபெறும் கச்சத்தீவு திருவிழாவை இந்தியர்கள் புறக்கணித்துள்ளது இலங்கை அரசியல் வட்டாரத்தில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.




Next Story