வீடு புகுந்து அரிவாள் வெட்டு: 5 பேர் ரத்த வெள்ளத்தில் மயங்க.. நகை, பணத்தை அள்ளிச் சென்ற கொள்ளையர்கள்


வீடு புகுந்து அரிவாள் வெட்டு: 5 பேர் ரத்த வெள்ளத்தில் மயங்க.. நகை, பணத்தை அள்ளிச் சென்ற கொள்ளையர்கள்
x

காளையார்கோவில் பகுதிகளில் தொடர்ந்து நடக்கும் கொள்ளை சம்பவங்களை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள கல்லுவழி கிராமத்தை சேர்ந்தவர் ஜேக்கப் பாரி. வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய தந்தை சின்னப்பன் (வயது 67). தாயார் உபகாரமேரி (65). இவர்களுடன் பாரியின் மனைவி அரசி (35), மகள் ஜெர்லின் (14), மகன் ஜோபின் (10) ஆகியோரும் கல்லுவழி கிராமத்தில் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலையில் அவர்கள் 5 பேரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர்கள் சிலர் வீட்டுக்குள் புகுந்து சின்னப்பன் குடும்பத்தினர் 5 பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர்கள் ரத்த வெள்ளத்தில் மயங்கினர். பின்னர் மர்ம நபர்கள், வீட்டில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பினர்.

நேற்று காலையில் சிறுவன் ஜோபின் கண் விழித்து, சம்பவம் குறித்து உறவினர்களிடம் தகவல் தெரிவித்தான். அதன்பேரில் ஆம்புலன்சுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

பின்னர் படுகாயங்களுடன் கிடந்த 5 பேரும் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் காளையார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராமநாதபுரம் போலீஸ் டி.ஐ.ஜி. துரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடியே சிறிது தூரம் ஓடி சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தடயவியல் நிபுணர்கள் அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர்.

இதனிடையே மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் கல்லுவழி விலக்கில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, காளையார்கோவில் பகுதிகளில் தொடர்ந்து நடக்கும் கொள்ளை சம்பவங்களை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை, கொள்ளை கும்பல்களைச் சேர்ந்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என பேச்சுவார்த்தையின்போது போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு, கிராம மக்கள் கலைந்து சென்றனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.


Next Story