அமைச்சர் தொடங்கி வைத்த ஒரே வாரத்தில் நிறுத்தம்; கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பஸ் வசதி இல்லாமல் அல்லல்படும் நோயாளிகள்
அமைச்சர் தொடங்கி வைத்த ஒரே வாரத்தில் நிறுத்தப்பட்டதால் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பஸ் வசதி இல்லாமல் அல்லல்படும் நோயாளிகள் அவதிப்பட்டுள்ளனா்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி உடன் கூடிய மருத்துவமனை சிறுவங்கூர் சமத்துவபுரம் அருகே இயங்கி வருகிறது.
ரூபாய் 398 கோடியே 50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது. இதில், கல்லூாியை கடந்த 2022-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அதை தொடர்ந்து மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 11-ந்தேதி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் மருத்துவமனையை திறந்து வைத்து மருத்துவ சேவையை தொடங்கி வைத்தனர்.
அரசு கல்லூரியுடன் கூடிய மருத்துவமனையானது கள்ளக்குறிச்சி நகரில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டம்மட்டுமின்றி, சேலம் மாவட்டத்தில் இருந்தும் மக்கள் வருகிறார்கள்.
அதேபோல் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் என 200-க்கும் மேற்பட்டவர்கள் தினமும் சென்று வருகின்றனர்.
ஆட்டோவுக்கு ரூ.200 கட்டணம்
ஆனால், இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போதிய பஸ் வசதி இல்லாதது, மக்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது. கள்ளக்குறிச்சியில் இருந்து மருத்துவமனை வழியாக பழையசிறுவங்கூர், அணைகரைக் கோட்டாலத்துக்கு 2 பஸ்கள் மட்டும் செல்கிறது. அதுவும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மட்டும் தான் இயக்கப்படும்.
கைக்கு எட்டும் தூரத்தில் மருத்துவ வசதிகள் இருந்தாலும், அங்கு சென்று உரிய சிகிச்சை பெறுவதற்கு போதிய போக்குவரத்து வசதி இல்லாதது, அனைத்து தரப்பு மக்களையும் ஏமாற்றத்துக்கு உள்ளாக்கி வருகிறது. குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் தான் பெரும் இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். வேறுவழியின்றி இவர்களை போன்றவர்கள் கள்ளக்குறிச்சியில் இருந்து ஆட்டோவுக்கு ரூ. 200 கட்டணம் செலுத்தி சென்று இலவச மருத்துவ சிகிச்சையை பெற வேண்டி உள்ளது. இதைபோன்று 200 ரூபாய் கொடுத்து அங்கிருந்து பஸ்நிலையம் வருகிறார்கள். 'சுண்டைக்காய் கால்பணம், சுமைக்கூலி முக்கால்பணம்' என்கிற பழமொழிக்கு ஏற்ப இருக்கிறது இந்த மருத்துவமனைக்கு நோயாளிகள் செல்லும் நிலமை.
ஒருவாரம் ஓடிய பஸ்கள்
பொதுமக்களின் சிரமத்தை எண்ணி, கடந்த மே மாதம் 27-ந்தேதி கள்ளக்குறிச்சியில் இருந்து மருத்துவமனைக்கு செல்லும் வகையில் 20 நிமிடத்துக்கு ஒருமுறை என்கிற வகையில் பஸ்கள் இயக்கப்பட்டது. இந்த பஸ்களை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.
ஆனால் ஒரு வாரம் மட்டும் மருத்துவமனை வழியாக பஸ்கள் சென்று வந்தன. அதன் பின்னர் அதுவும் நிறுத்தப்பட்டு, 'பழைய குருடி கதவை திறடி' என்கிற பழமொழியாக நிலமை மாறிவிட்டது.
இருப்பினும் பஸ்கள் இயக்கப்படுகிறது என்பதை காண்பிக்கும் வகையில், எப்போதாவது சில நேரங்களில் ஒருசில பஸ்களை இயக்கி வருகிறார்கள். அதுவும் எப்போது இயக்கப்படும் என்று மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளுக்கு தெரிவதில்லை.
இதனால் மீண்டும், மருத்துவமனைக்கு செல்ல அதே ஆட்டோ பயணம், கால்கடுக்க பஸ்நிலையத்தில் அந்த 2 பஸ்களுக்காக காத்திருக்கும் நிலை என்பதே தற்சமயம் தொடர்கிறது.
எந்த பஸ்களும் வரவில்லை
இதுகுறித்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தவர்கள் அளித்த கருத்துகள் வருமாறு:-
முனிவாழை கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி:-
எங்கள் கிராமத்தில் இருந்து கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் இறங்கி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்வதற்கு சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்தேன். ஆனால் பஸ் வரவில்லை.பேருந்து நிலையத்தில் வழித்தட எண்ணுடன் இயக்கப்படும் பஸ்கள் குறித்து வைக்கப்பட்டுள்ள தகவல் பலகையின் அடிப்படையில் எந்த பஸ்களும் அங்கு வரவில்லை. எனவே வேறு வழியில்லாமல் பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்து ஆட்டோவில் ரூ.200 ரூபாய் கொடுத்து மருத்துவமனைக்கு வந்தேன். வசதி இல்லாததால் தான் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்தோம், ஆனால் ஆட்டோவுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை செலவு செய்யக்கூடிய சூழ்நிலை உள்ளது என்று கவலையுடன் தெரிவித்தார்.
ஏழை எளிய மக்கள் பயன்பெறுவார்கள்
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே புத்தூர் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி:-
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் நல்ல முறையில் சிகிச்சை அளிப்பதாக கேள்விப்பட்டோம். எனவே எனது மனைவிக்கு சிகிச்சை பெறுவதற்காக அவருடன் கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்துக்கு வந்தேன். அங்கிருந்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்வதற்காக சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்தோம். ஆனால் எந்த பஸ்சும் வரவில்லை. பின்னர் ஒரு ஆட்டோவில் ஏறி மருத்துவமனைக்கு வந்தோம். எங்களுடன் அந்த ஆட்டோவில் 10 பேர் இருந்ததால், தலா ரூ. 20 வீதம் ஆட்டோ டிரைவரிடம் ரூ. 200 கட்டணமாக கொடுத்தோம். இதனால் மிகவும் சிரமமாக உள்ளது. எனவே அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும்-கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்திற்கும் இடையே அரசு பஸ்களை இயக்கினால் எங்களை போன்ற ஏழை எளிய மக்கள் மிகவும் பயனடைவார்கள் என்றார்.