கல்பாக்கம் அணுமின் நிலைய விஞ்ஞானி தூக்கிட்டு தற்கொலை.. குடும்ப பிரச்சனை?
மனைவி சண்டைபோட்டு தாய் வீட்டிற்கு சென்ற நிலையில் கல்பாக்கம் அணுமின் நிலைய விஞ்ஞானி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின்நிலையத்தில் பல துறைகள் இயங்கிவருகிறது. இதில் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வந்தவர் யுவராஜ் (வயது 51). அதே பகுதியில் உள்ள கல்பாக்கம் அணுமின் நிலைய குடியிருப்பு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ள நிலையில் அவருக்கும் அவரது மனைவிக்கும் வாய்த்தகராறு ஏற்ப்பட்டதாகவும், இதில் அவரது மனைவி சண்டைபோட்டு கொண்டு சென்னையிலுள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று விடுமுறை என்பதால் வீட்டில் இருந்த யுவராஜ் பள்ளிக்கு சென்றிருந்த தனது மகனுக்கு மதிய உணவு கொடுத்து விட்டு வந்து, வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிய அவரது மகன் தனது தந்தை மின் விசிறியில் தூக்கில் தொங்கியவாறு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டுள்ளார்.
உடனே அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் யுவராஜை மீட்டு கல்பாக்கம் அணுமின்நிலைய ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர் அங்கு அவரை பரிசோதித்த டக்டர்கள் அவர் ஏற்கனவே உயிர் இழந்தது விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த கல்பாக்கம் போலீசார் யுவராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரனை மேற்க்கொண்டு வருகின்றனர். யுவராஜ் அணுமின் நிலைய ஊழியர் விளையாட்டு மற்றும் பண்பாட்டு கழகத்தில் செயலாளராகவும் இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.