காஞ்சீபுரம் மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட இணை மானிய விளக்க கூட்டம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட இணை மானிய திட்ட விளக்க கூட்டத்தை கலெக்டர் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்தார்.
இணை மானிய விளக்க கூட்டம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் இணை மானிய திட்ட விளக்க கூட்டத்தை மாவட்ட கலெக்டர் கலைச்செல்விமோகன், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
வாழ்ந்து காட்டுவோம் திட்டம் உலக வங்கி நிதி உதவியுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத் மற்றும் காஞ்சீபுரம் ஆகிய 2 வட்டாரங்களில் உள்ள 101 கிராம ஊராட்சிகளில் ஊரகப்பகுதிகளில் தொழில் முனைவோர்களை உருவாக்குதல், தொழில் முனைவுகளுக்கான நிதி வழி வகைகளை ஏற்படுத்துதல் மற்றும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துதல் போன்ற நோக்கங்களை அடிப்படையாக கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கடனுதவி
இந்த திட்டத்தின் சிறப்பு அம்சமான இணை மானிய திட்டம் குறித்த பயிற்சியானது வங்கியாளர்கள், வட்டார மற்றும் மாவட்ட பணிக்குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. இணை மானிய திட்டம் விளக்க கையேட்டு பிரதியையும் வெளியிட்டு தமிழக அரசின் சீரிய திட்டமான வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் 30 சதவீத மானியத்துடன் கடனுதவி கிடைக்கும் இணை மானிய திட்டம் குறித்து அதிக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதிகமான நபர்களை இந்த திட்டத்தில் இணைய செய்ய வேண்டும். மேலும், வங்கியாளர்களும் கடனுதவிகளை விரைந்து வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதணை தொடர்ந்து ஒரு பயனாளிக்கு ரூ.3 லட்சத்திற்கான இணை மானிய திட்ட கடனுதவிக்கான காசோலையையும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மூலம் 138 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.12.9 கோடி அளவில் கடனுதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வக்குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) சங்கீதா, மாவட்ட செயல் அலுவலர், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஆரோன் ஜோஸ்வா ரூஸ்வெல்ட், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், வங்கி பிரதிநிதிகள் பணியாளர்கள் மற்றும் தொழில் சார் சமூக வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.