கனியாமூரில் கலவரத்தில் சூறையாடப்பட்ட பள்ளியில் சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆய்வு தீயில் எரியாமல் கிடந்த 2 ஹார்டு டிஸ்க்குகளை கைப்பற்றினர்


கனியாமூரில்    கலவரத்தில் சூறையாடப்பட்ட பள்ளியில் சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆய்வு    தீயில் எரியாமல் கிடந்த 2 ஹார்டு டிஸ்க்குகளை கைப்பற்றினர்
x

கனியாமூரில் கலவரத்தில் சூறையாடப்பட்ட பள்ளியில் சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆய்வு தீயில் எரியாமல் கிடந்த 2 ஹார்டு டிஸ்க்குகளை கைப்பற்றினர்

கள்ளக்குறிச்சி


கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்த பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதியின் மரணத்துக்கு நீதிகேட்டு கடந்த 17-ந்தேதி நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது.

தமிழகத்தையே பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கிய இந்த கலவர வழக்கை விசாரிக்க காவல்துறை உயரதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டு இருந்தார்.

அதன்படி சேலம் சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநவ் தலைமையில் போலீஸ் சூப்பிரண்டுகள் ராதாகிருஷ்ணன், கிங்ஸ்லின், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் திருமால், முத்துமாணிக்கம், சந்திரமெவுலி மற்றும் போலீசார் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

.இதையடுத்து, கண்காணிப்பு சிறப்பு புலனாய்வு குழுவைச் சேர்ந்த 5 பேர் கொண்ட உயரதிகாரிகள் நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சியில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து, தங்களது விசாரணையை தொடங்கினர்.

பள்ளியில் ஆய்வு

இதை தொடர்ந்து, நேற்று 2-வது நாளாக விசாரணையில் ஈடுபட்டனர். இதில், கலவரக்காரர்களால் சூறையாடப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, மாணவி ஸ்ரீமதி விழுந்ததாக கூறப்படும் இடத்தை டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநவ் பார்வையிட்டு உள்ளூர் போலீசாரிடம் விளக்கங்களை கேட்டறிந்தார். பின்னர் பள்ளியில் தீ வைத்து கொளுத்தப்பட்ட பஸ்கள் மற்றும் வாகனங்கள், அடித்து நொறுக்கப்பட்ட ஜன்னல் கண்ணாடிகள், தீவைக்கப்பட்ட வகுப்பறைகள், சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றை அவர்கள் பார்வையிட்டனர்.

2 ஹார்டு டிஸ்க்குகளை கைப்பற்றினர்

அப்போது பள்ளியில் காவலாளி அறையின் முன்பு 50-க்கும் மேற்பட்ட தீ அணைப்பான் கருவிகள் மற்றும் 5 கம்ப்யூட்டர்களை போட்டு தீ வைத்து எரித்து இருந்தனர். இதற்கு மத்தியில் 2 ஹார்டு டிஸ்க் மட்டும் எரியாமல் கிடந்தது. இதை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைப்பற்றினார்கள். இதன் பின்னர், டிரோன் கேமரா மூலமாக பள்ளி வளாகம் முழுவதையும் அவர்கள் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர்.

கைரேகைகள் பதிவு

ஆய்வின் போது, சிறப்பு புலனாய்வு குழுவில் இடம் பெற்று இருந்த போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் திருமால், முத்துமாணிக்கம், சந்திரமெவுலி ஆகியோர் உடனிருந்தனர். இங்கு கைப்பற்றப்பட்ட ஹார்டுடிஸ்க்குகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று சிறப்பு புலனாய்வு குழுவினர் தெரிவித்தனர்.

கலவரம் நடந்ததற்கான காரணம் என்ன? கலவரத்துக்கான சாத்திய கூறுகள், கலவரத்தில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் என்று பல்வேறு கோணங்களில் விசாரித்து, கலவரத்தின் பின்னணியில் இருப்பவர்களை அடையாளம் காணும் நோக்கில் சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.முன்னதாக தடயவியல் துணை இயக்குனர் சண்முகம், கைரேகை பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் ஆகியோர் தலை மையிலான குழுவினர் பள்ளியில் நேற்றும் ஆய்வு செய்து, தடயங்கள் மற்றும் கைரேகைகளை பதிவு செய்தனர்.


Next Story