கன்னியாகுமரி: திருவள்ளுவர் சிலையில் காகித கூழ் பூசும்பணி தீவிரம்


கன்னியாகுமரி: திருவள்ளுவர் சிலையில் காகித கூழ் பூசும்பணி தீவிரம்
x

திருவள்ளுவர் சிலை உப்புக்காற்றினால் பாதிக்கப்படாமல் இருப்ப தற்காக 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாலி சிலிக்கான் என்ற ரசாயன கலவை பூசப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரியில் கடலின் நடுவே அமைந்துஉள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் மண்டபமும் அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளன. திருவள்ளுவர் சிலை உப்புக்காற்றினால் பாதிக்கப்படாமல் இருப்ப தற்காக 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாலி சிலிக்கான் என்ற ரசாயன கலவை பூசப்பட்டு வருகிறது.

கடந்த 2017-ம் ஆண்டு ரசாயனக் கலவை பூசப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு ரசாயனக் கலவை பூச அரசு நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்தப்பணிகள் நடைபெறவில்லை. இந்த நிலையில் கொரோனா பரவல் குறைந்ததையடுத்து உயர் மட்ட குழுவினர் திருவள்ளு வர் சிலையை சென்று பார்வையிட்டனர்.

பின்னர் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ரூ.1 கோடி திட்ட மதிப்பில் ரசாயனக் கலவை பூசுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதையடுத்து ரசாயானக்கலவை பூசும்பணி கடந்த ஜூன் மாதம் 6-ந் தேதி தொடங்கியது. முதல்கட்டமாக திருவள்ளுவர் சிலையில் சுண்ணாம்பு கலவை பூசப்பட்டது. தொடர்ந்து தண்ணீரால் சிலை சுத்தம் செய்யப்பட்டது. அதன்பிறகு காகித கூழ் பூசும் பணி தொடங்கியது. இதற்கிடையில் தொடர்ந்து மழை பெய்ததால் காகித கூழ் கரைந்து நாசமானது. இதைத் தொடர்ந்து மழையினால் காகித கூழ் பூசும்பணி நிறுத்தப்பட்டது.

இந்தநிலையில் மழை ஓய்ந்ததை தொடர்ந்து தற்போது சிலையின் தலைப்பாகத்தில் காகிதக்கூழ் பூசும் பணி தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 15 நாட்கள் காகிதக்கூழ் பூசப்பட்டு மீண்டும் தண்ணீரால் சிலை சுத்தம் செய்யப்படும். இதைத்தொடர்ந்து பாலி சிலிக்கான் என்னும் ரசாயனக்கலவை பூசும்பணி நடைபெறும். இங்கு பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் கன்னியாகுமரிக்கு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தை மட்டும் நேரில் பார்வையிட்டுச் செல்கின்றனர். திருவள்ளுவர் சிலையில் இன்னும் ஓரிரு மாதங்களில் ரசாயனக்கலவை பூசும் பணி நிறைவுபெறும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து திருவள்ளுவர் சிலைக்கு படகுப் போக்குவரத்து தொடங்கப்படும் என்று தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிகழக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story