கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி:
இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா நாளை மறுநாள்( திங்கட்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது.
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுஉள்ளது. அங்கு 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இது தவிர கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அதிநவீன ரோந்து படகுகளில் கடல் வழியாக சென்று தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். கடலோர பாதுகாப்பு குழும போலீசுக்கு சொந்தமான 11 சோதனை சாவடிகளில் போலீசார் இரவு பகலாக சோதனை நடத்திவருகிறார்கள்.