கர்நாடக காங்கிரஸ் அரசு உள்நோக்கத்துடன் செயல்படுகிறது


கர்நாடக காங்கிரஸ் அரசு உள்நோக்கத்துடன் செயல்படுகிறது
x
தினத்தந்தி 14 Oct 2023 6:45 PM GMT (Updated: 14 Oct 2023 6:45 PM GMT)

காவிரி விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசு உள்நோக்கத்துடன் செயல்படுகிறது என் இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார்.

திருவாரூர்

ஆர்ப்பாட்டம்

கர்நாடக காங்கிரஸ் அரசு சுப்ரீம் கோர்ட்டு மற்றும் காவிரி ஆணைய உத்தரவின்படி தண்ணீரை திறந்து விட வேண்டும் என வலியுறுத்தி திருவாரூர் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். இதில் இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டு பேசினார். இதில் விவசாயிகள் கையில் கருகிய பயிருடனும், மண்வெட்டியுடன் கலந்து கொண்டு கர்நாடக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

பேட்டி

பின்னர் அர்ஜுன் சம்பத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- காவிரி விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசு வேண்டும் என்றே உள்நோக்கத்துடன் செயல்படுகிறது. ஒழுங்காற்று குழுவின் உத்தரவை மதிக்காமல் கர்நாடக அரசு நடந்து கொள்வதுடன் அங்கு உள்ள சினிமாக்காரர்களை தூண்டி விடுவது, முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்தை வைத்து தேவையற்ற போராட்டங்களை நடத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

முதல்-அமைச்சர் மு.கஸ்டாலின் சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி காவிரி நீரை பெற்றுத்தர மத்திய அரசை வலியுறுத்துகிறார். இதில் மத்திய அரசுக்கு என்ன இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டின் ஒழுங்காற்று குழு தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டியது கர்நாடக அரசு தான்.

ஆதரவு

குண்டு வெடிப்பு கைதிகளை விடுதலை செய்வது கண்டிக்கத்தக்கது. கர்நாடகாவில் 5 ஆண்டுகள் பா.ஜனதா ஆட்சி இருக்கும்போது தண்ணீர் வருவதில் எந்த பிரச்சினையும் இல்லை.வரலாற்று சிறப்புமிக்க திருவாரூர் கமலாலய குளம் சேறும், சகதியுமாக துர்நாற்றம் வீசுகிறது.

இதில் படகு சவாரி விடுவதற்கு இது என்ன விளையாட்டு பூங்காவா?, கோவில் குளங்கள் புனிதமானது. அதனை முறையாக தூர்வாரி அதன் புனிதத்தன்மை கெடாமல் பராமரிக்க வேண்டும் என்று சிவனடியார்கள் நாளை திருவாரூரில் போராட்டம் நடத்த இருக்கிறார்கள். இந்த போராட்டத்திற்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு தெரிவிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story