'மேகதாது அணை குறித்த பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று கர்நாடகாவை எச்சரிக்க வேண்டும்' - ராமதாஸ் வலியுறுத்தல்
மேகதாது அணை தொடர்பான பணிகளை மேற்கொள்ளாமல் கர்நாடகாவை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
மேகதாது அணை குறித்த பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று கர்நாடகாவை மத்திய அரசு எச்சரிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
"காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்டுவதற்கான திட்டமிடல் பணிகளும், நிலம் எடுத்தல் பணிகளும் விரைவுபடுத்தப்பட்டிருப்பதாக கர்நாடக அரசு தெரிவித்திருக்கிறது. மேகதாது அணை குறித்து காவிரி ஆணையக் கூட்டத்தில் விவாதிப்பதற்குக் கூட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மேகதாது அணைக்கான நிலம் கையகப்படுத்துதல் பணிகளை கர்நாடக அரசு மேற்கொள்வது கண்டிக்கத்தக்கது.
கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்துப் பேசிய அம்மாநில கவர்னர் தாவர்சந்த் கெலாட்,''காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டும் திட்டப் பணிகளை விரைவுபடுத்தும் நோக்குடன், வனத்துறையிடமிருந்து எடுக்கப்படும் நிலத்திற்கு மாற்றாக வேறு நிலம் வழங்குவதற்கும், அணைக்கான நிலம் கையகப்படுத்தல் மற்றும் திட்டமிடல் பணிகளை விரைவுபடுத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன'' என்று தெரிவித்திருக்கிறார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கான முயற்சிகளில் கர்நாடக அரசு கடந்த 50 ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் போதிலும், கடந்த 6 ஆண்டுகளாக மேகதாது அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை கர்நாடக அரசு தீவிரப்படுத்தியிருக்கிறது.
மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கையை தயாரிக்க 2018-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மத்திய அரசு அளித்த அனுமதி தான் கர்நாடகத்தின் இந்த அத்துமீறல்கள் அனைத்துக்கும் அடிப்படை ஆகும். இந்த அனுமதியைப் பயன்படுத்தி தான் மேகேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடகம் தயாரித்து, காவிரி மேலாண்மை ஆணையத்தில் தாக்கல் செய்து, அதற்கு ஒப்புதல் கேட்டுக் கொண்டிருக்கிறது.
வரைவு திட்ட அறிக்கையை தயாரிக்க மத்திய அரசு அளித்த அனுமதி தவறு, அதை ரத்து செய்ய வேண்டும் என்று கூறித்தான் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது. விரிவான திட்ட அறிக்கை குறித்து விவாதிக்க காவிரி மேலாண்மை ஆணையம் முடிவு செய்த நிலையில், அதற்கு பா.ம.க. கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியது. அதனடிப்படையில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, விரிவான திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கவும், அதனடிப்படையில் மேகேதாட்டு அணைக்கு அனுமதி அளிக்கவும் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது.
இதன் பொருள் என்னவெனில், மேகேதாட்டு அணை குறித்த எந்தப் பணிகளையும் கர்நாடக அரசு மேற்கொள்ளக்கூடாது என்பது தான். அவ்வாறு இருக்கும் போது மேகேதாட்டு அணை கட்டுவதற்கான நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை மேற்கொள்வது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு முற்றிலும் எதிரானது ஆகும்.
இந்தத் தவறை கர்நாடக அரசின் கவர்னர், முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி ஆகிய மூவரும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்த அணுகுமுறை முற்றிலும் தவறானது. கர்நாடகத்தின் இப்போக்கை மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது.
சென்னை மாகாணத்திற்கும், மைசூர் சமஸ்தானத்திற்கும் இடையே 1924 ஆம் ஆண்டில் கையெழுத்தான காவிரி நீர்ப் பகிர்வு ஒப்பந்தத்தின்படி, கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே அம்மாநில அரசு அணைகளை கட்ட முடியாது. காவிரி சிக்கல் தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில், கடைமடை பாசன மாநிலமான தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணைகளை கட்ட முடியாது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதை சுட்டிக்காட்டி, தமிழகத்தின் ஒப்புதல் இல்லாவிட்டால், மேகதாது அணைக்கான கர்நாடகத்தின் விண்ணப்பத்தை ஆய்வுக்குக் கூட எடுத்துக் கொள்ள மாட்டோம் என்று 2015 ஆம் ஆண்டில் அப்போதைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி, பா.ம.க. மக்களைவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் உறுதி அளித்திருக்கிறார். ஆனால், இந்த வரலாற்று உண்மைகளை மறைத்து விட்டு, மேகதாது பகுதியில் காவிரியின் குறுக்கே அணை கட்டியே தீருவோம் என கர்நாடகா கூறுவது அரசியலமைப்பு சட்டத்துக்கும் எதிரானது.
மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கையை தயாரிக்க மத்திய அரசு அளித்த அனுமதி தவறு; அதை ரத்து செய்ய வேண்டும் என்று கூறித்தான் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது. வரைவு திட்ட அறிக்கைக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டு விட்டால், மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை செல்லாததாகி விடும். அதனால், மேகதாது அணை குறித்த எந்த பணிகளையும் கர்நாடக அரசு மேற்கொள்ள முடியாது.
இதை தெரிந்து கொண்டும் அணைக்கான பணிகளை மேற்கொள்வதை அனுமதிக்க முடியாது. இந்த சிக்கலில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு, மேகதாது அணை குறித்த பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று கர்நாடகாவை எச்சரிக்க வேண்டும், எந்தப் பணிகளும் மேற்கொள்ளாமல் கர்நாடகாவை கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்."
இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.