பா.ஜ.க.வின் இந்தி, இந்துத்துவா அரசியலை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்


பா.ஜ.க.வின் இந்தி, இந்துத்துவா அரசியலை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்
x
தினத்தந்தி 13 Oct 2022 6:45 PM GMT (Updated: 13 Oct 2022 6:46 PM GMT)

பா.ஜ.க.வின் இந்தி, இந்துத்துவா அரசியலை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள் என கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.

சிவகங்கை

காரைக்குடி,

பா.ஜ.க.வின் இந்தி, இந்துத்துவா அரசியலை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள் என கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.

இந்தி திணிப்பு

காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மத்திய அரசு இந்தி திணிப்பில் முனைப்பாக உள்ளது. வட மாநில மருத்துவ கல்லூரியில் இந்தியிலேயே முழுவதும் பாடத்திட்டம் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது மிகவும் ஆபத்தானது. அரசுக்கு வரும் கடிதம் அனைத்தும் இந்தியிலேயே இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள். தமிழக முதல்-அமைச்சர் இதனை எதிர்த்து குரல் கொடுத்துள்ளார். இந்தி திணிப்பை நாங்கள் எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். ராகுல் காந்தியின் பாதயாத்திரை அனைத்து மக்களிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. மக்களிடையே ராகுல் காந்தியின் மன உறுதியை வெளிப்படுத்துகின்றது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 8 வருடமாக பணிகள் தொடங்கப்படாமலே உள்ளது. மத்திய அரசிற்கும், தமிழகத்திற்கும் சித்தாந்த ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் முரண்பாடு உள்ளது. அதனால் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழகத்தை மத்திய அரசு நடத்துகிறது.

கட்சி தலைமை

காங்கிரஸ் கட்சியில் நேரு, காந்தி குடும்பத்தை சாராதவர்கள் முன்பு கட்சி தலைவராக இருந்து உள்ளார்கள். ஆனாலும் கட்சியின் அடிப்படை தொண்டனின் மானசீக தலைவராக ராகுல் காந்தியே இருக்கிறார். யார் தலைவராக வந்தாலும் நேரு, காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்களின் ஆலோசனை அறிவுரைப்படிதான் காங்கிரஸ் கட்சி தலைமை நடக்கும்.

இந்தியாவில் தற்போது பணவீக்கம் கூடியுள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துவிட்டது. பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்திய பொருளாதாரம் நல்ல நிலையில் இல்லை.

ஏற்கமாட்டார்கள்

பா.ஜ.க.வினர் மக்கள் மனதில் இடம் பிடிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. பா.ஜ.க.வின் இந்தி, இந்துத்துவா அரசியலை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தேசிய அளவில் ஒரு பலமான கூட்டணி அமையும். பா.ஜ.க. மீது உள்ள வெறுப்பின் காரணமாக அனைத்து கட்சிகளும் ஒன்று சேரும். அதற்கு அச்சாணியாக காங்கிரஸ் இருக்கும்.

இவ்வாறு கூறினார்.

பேட்டியின்போது மாங்குடி எம்.எல்.ஏ. மாவட்ட தலைவர் சத்தியமுர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புராம், நகர காங்கிரஸ் தலைவர் பாண்டி மெய்யப்பன், மாவட்ட துணைத்தலைவர் அப்பச்சி சபாபதி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

வளர்ச்சி பாதை

சிவகங்கையில் 5-வது வார்டில் எம்.பி. நிதியில் இருந்து போடப்பட்ட பேவர் பிளாக் சாலையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்த கார்த்தி சிதம்பரம் எம்.பி. நிருபர்களிடம் கூறுகையில், தமிழக அரசியலில் வளர்ச்சி பாதையில் செல்லாமல் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்ட அரசர் எந்த மதத்தை சேர்ந்தவர் என உணர்ச்சி, கவர்ச்சியை நோக்கியே செல்கிறது. பிரதமர் மோடி தேவர் குருபூஜை விழாவிற்கு தமிழகம் வருவதை வரவேற்கிறேன். வரும்போது 95 சதவீதம் முடிந்ததாக கூறப்படும் எய்ம்ஸ் மருத்துவமனையை பார்த்துவிட்டு வந்தால் நன்றாக இருக்கும். தி.மு.க. மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்றார்.

அப்போது, மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. ராஜசேகரன், மாவட்ட துணை தலைவர் சண்முகராஜன், நகர்மன்ற உறுப்பினர்கள் விஜயகுமார், மகேஸ் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story