கார்த்திகை தீபவிழா: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வருகிற 30-ந் தேதி பந்தக்கால் முகூர்த்தம்


கார்த்திகை தீபவிழா: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வருகிற 30-ந் தேதி பந்தக்கால் முகூர்த்தம்
x

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்ச்சி வருகிற 30-ந் தேதி நடக்கிறது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா துர்க்கை அம்மன் உற்சவத்துடன் வரும் நவம்பர் 24-ம்தேதி தொடங்குகிறது. மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்கக் கொடிமரத்தில், கொடியேற்றம் நடைபெற்றதும், பஞ்சமூர்த்திகளின் 10 நாள் உற்சவம் நடைபெறும்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த, பஞ்ச ரதங்களின் மகா தேரோட்டம், கொடியேற்றத்துக்கு பிறகு வரும் 7-ம் நாள் உற்சவத்தில் நடைபெறவுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான கார்த்திகை தீபத் திருவிழா வரும் டிசம்பர் 6-ந் தேதி நடைபெறவுள்ளது.

2,668 அடி உயரம் உள்ள, மலையே மகேசன் என போற்றப்படும் அண்ணாமலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. முன்னதாக, கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படும்.

இந்நிலையில், கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி பூர்வாங்கப் பணிகளை மேற்கொள்வதற்காக, பந்தக்கால் முகூர்த்தம் வருகிற 30-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை நடைபெறவுள்ளது. அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் அதிகாலை 5.30 மணிக்கு மேல் 7 மணிக்குள் கன்னியா லக்கினத்தில் பந்தக்கால் முகூர்த்தம் நடைபெறவுள்ளது.

மங்கல இசை ஒலிக்க, சிவாச் சாரியார்கள் வேத மந்திரங்களை சிறப்பு முழங்க பந்தக்காலுக்கு அபிஷேகம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


Next Story