கருணாநிதி பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாட்டம்- சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை


கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் கருணாநிதியின் படத்துக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கினார்கள்.

சென்னை

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாளான ஜூன் 3ம் தேதியான இன்று அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்றும், கருணாநிதி உருவச் சிலை சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

அதனைச் செயல்படுத்திடும் வகையில், கருணாநிதியின் 99-வது பிறந்த நாள் விழா தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு விழாவாக இன்று கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி பல்வேறு இடங்களில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தி.மு.க. தலைவரான முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 8 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்தார். சிலைக்கு முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கும் மாலை அணிவித்து மலர் தூவி வணங்கினார்.

அவருடன் தி.மு.க. பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., டி.கே.எஸ். இளங்கோவன், ஆ.ராசா எம்.பி., தயாநிதிமாறன் எம்.பி., தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி எஸ்.முருகன், துறைமுகம் காஜா, சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் நே.சிற்றரசு உள்பட முக்கிய நிர்வாகிகள் கருணாநிதியின் படத்துக்கு மலர் தூவி வணங்கினர்.

இதன் பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோடம்பாக்கத்தில உள்ள முரசொலி அலுவலகத்துக்கு சென்றார். அங்கு கருணாநிதியின் சிலை முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வும் மலர்தூவி வணங்கினார்.

இதன் பிறகு சி.ஐ.டி. காலனியில் உள்ள கனிமொழி எம்.பி.யின் வீட்டிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரயாதை செலுத்தினார். அவருடன் கனிமொழி எம்.பி. உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதி வசித்த கோபாலபுரம் வீட்டுக்கு சென்றார். அங்கு வீட்டு வாசலில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலர் தூவி வணங்கினார்.

வீட்டின் உள்ளேயும் கருணாதியின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அந்த படத்துக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி வணங்கினார். மனைவி துர்கா ஸ்டாலின், சகோதரி செல்வி, சகோதரர் மு.க.தமிழரசு, கனிமொழி எம்.பி. உதயநிதி ஸ்டாலின், அமிர்தம் உள்ளிட்ட குடும்பத்தினரும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். கட்சியின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்களும் இதில் பங்கேற்றனர்.

கருணாநிதியின் திருவுருவச் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்ரோன் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதன் பிறகு ஓமந்தூரார் தோட்டத்தில் கடந்த 28-ந் தேதி துணை ஜனாதிபதியால் திறக்கப்பட்டிருந்த கருணாநிதியின் திருவுருவச் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்ரோன் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தினார். சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த உருவப் படத்துக்கும் மலர்தூவி வணங்கினார்.

அவருடன் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தித்துறை இயக்குனர் ஜெயசீலன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

கருணாநிதியின் சிலையை வடிவமைத்த மீஞ்சூரை சேர்ந்த சிற்பி தீனதயாளனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.



கருணாநிதி பிறந்தநாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவருடைய நினைவிடம் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது காட்சி.

இந்த நிகழ்ச்சிக்கு கருணாநிதியின் வேடம் அணிந்து 25 மாணவர்கள் வந்திருந்தனர். அவர்களுடன் நின்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

பின்னர் அங்கிருந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்துக்கு சென்றார்.

அங்கு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள், மேயர் பிரியா, மண்டல குழு தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் சென்று மரியாதை செலுத்தினார்கள்.

அந்த பகுதியில் நடைபெற்று வரும் நினைவிட கட்டுமான பணிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அதன் பிறகு கோட்டைக்கு புறப்பட்டு சென்றார்.

கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் கருணாநிதியின் படத்துக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கினார்கள்.

ஏழைகளுக்கு அறுசுவை உணவு, பிரியாணியும் வழங்கப்பட்டன. கருணாநிதியின் சாதனை விளக்க பாடல்களும் ஆங்காங்கே ஒலிபரப்பப்பட்டன.


Next Story